மேலதிக கடன்; பாராளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்க வேண்டும்

கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மேலதிக கடனைப் பெறும்போது எதிர்நோக்கும் சட்டச் சிக்கலை தவிர்க்கும் வகையில் கடன் தொகையை அதிகரிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இப்பிரேரணையை நிறைவேற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்  ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல் காலாண்டில் கடன் வாங்கக்கூடிய எல்லையை அரசாங்கம் ஏற்கனவே அண்மித்து உள்ளதனால், இதுபோன்றதொரு சூழ்நிலையில் பல நெருக்கடிகளை சந்திக்க அரசாங்கத்துக்கு நேரிடும். இதன் காரணமாக ஏற்படும் சட்டச் சிக்கலினால் உலக வங்கியால் அண்மையில் வழங்கப்பட்ட இலகு கடன் வசதியை பெற்றுக் கொள்வதிலும் காலதாமதம் ஏற்படும்.இச்சட்டச் சிக்கலுக்கு தீர்வாகவே அரசாங்கம் தனது கடன் எல்லையை அதிகரிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை கொண்டுவர வேண்டுமென்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பில் வெளியிட்டுள்ளஅறிக்ைகயில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது-, 2020 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரசாங்கத்தால் பெற்றுக் கொள்ளக்கூடிய கடன் எல்லையானது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மூலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஏப்ரல் 02 ஆம் திகதி வரை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள கடன் தொகையானது பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ள எல்லையை அண்மித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்துக்கு தனது கடன் எல்லைக்கு மேலதிகமாக கடன் பெற்றுக் கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நிதி பற்றாக்குறையால் அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இச்சட்டச் சிக்கல் காரணமாக 'கொவிட்-19'க்கு எதிரான போராட்டத்துக்காக உலக வங்கியால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 128 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொள்வதிலும் காலதாமதம் ஏற்படலாம்.

அதனால் அரசாங்கம் விரைவில் பாராளுமன்றத்தைக் கூட்டி கடன் தொகையை அதிகரிப்பதற்கான பிரேரணையொன்றை சமர்பிக்க வேண்டும். இப்பிரேரணையை நிறைவேற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 04/09/2020 - 12:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை