ரொம் அண்ட் ஜெர்ரி இயக்குநர் மரணம்

பலராலும் ரசிக்கப்படும் 'ரொம் அண்ட் ஜெர்ரி'  இயக்குநர் ஜீன் டைச் காலமானார். அவருக்கு வயது 95. இன்றும் பலராலும் ரசிக்கப்படும் கார்ட்டூன்களில் முக்கியமானது ரொம் அண்ட் ஜெர்ரி.

எலியும் பூனையும் ஒன்றை ஒன்று துரத்தும் கார்ட்டூன்களை பார்த்து ரசிக்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள்.     

அனிமேட்டர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டவர் அவர்.  சிகாகோவில் பிறந்த ஜீன் டைச் பல்வேறு கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய இளம் வயதில் வட அமெரிக்காவில் விமானப்படையில் பணியாற்றிய டைச், இராணுவத்திலும் தொழில் புரிந்துள்ளார். விமானம் செலுத்துவதில் அலாதி பிரியம் கொண்ட டைச், விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியையும் பெற்றார்.  இசை சம்பந்தப்பட்ட துறையிலும் பணியாற்றினார் டைச்.

1955 ஆம் ஆண்டு அனிமேஷன் ஸ்டுடியோ ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கிய டைச்சுக்கு அப்போதுதான் புரிந்தது இதுதான் நமக்கான வேலை என்று. ஆர்வத்துடன் அனிமேஷன் துறையில் பணியாற்றிய டைச், 'சிட்னி தி எலிஃபண்ட்', 'க்ளிண்ட் க்ளாபர்' உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார். ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கொடி கட்டி பறந்தார் டைச். இதனைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு டைச் சொந்தமாக அனிமேஷன் கம்பெனியை ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் விளம்பரப் படங்களை உருவாக்கிக் கொடுத்தார். பின்னர் 1960-ஆம் ஆண்டு டைச் உருவாக்கிய 'முன்ரோ' என்ற கார்ட்டூன்  சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்றது.  இவர் இயக்கிய அனிமேஷன் குறும்படங்கள் பல ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.

இந்நிலையில் இயக்குநர் ஜீன் டைச்  பராகுவேவில் இருக்கும் தனது தொடர்மாடி வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.  டைச்சின் மரணம் திரைத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Wed, 04/22/2020 - 06:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை