பதுளை மாவட்ட தோட்டப்புற மக்கள்; நிவாரணம் வழங்குவதில் புறக்கணிப்பு

பதுளை மாவட்ட மக்களுக்கு அரசாங்க நிவாரணம் வழங்கப்படுவதில் தோட்டப்புற மக்கள் புறக்கணிக்கப்படுவதால் முறையான பொறிமுறையை அமுல் படுத்தி எதிர்வரும் காலங்களில் நிவாரணம் வழங்குமாறு பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்றமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார் பதுளை மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் பதுளை மாவட்ட செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில்,

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் மாவட்டத்தில் பரவ விடாமல் தடுக்கவும் பல வெற்றிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். எனினும் தொடர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையிழந்து இருக்கும் மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படும் போது மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம சேவையாளர் பிரிவுகள் என்பவற்றுக்கிடையில் வெவ்வேறான நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. இதுவரை நிவாரணம் வழங்கப்பட்ட பிரதேசங்களில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டுள்ளது.

நிவாரணம் தேவையான பயனாளிகளுக்கு சென்றடையாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களும் நிவாரணம் பெறத் தகுதியானவர்களாக இருக்கின்ற போதும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நிவாரணம் கிட்டவில்லை. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தோட்ட மக்கள் இருக்கின்ற போதும் நிவாரண உதவிகள் இதுவரை கிட்டவில்லை. வழங்கப்படும் நிவாரண விநியோகத்திலும் முறைகேடுகள் நிகழ்கின்றன.

எனவே மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் செயலாளர்களை இவ்விடயம் தொடர்பாக தெளிவுப்படுத்தி கிராம சேவையாளர்கள், சமுர்தி உத்தியோகத்தியர்கள் மூலமாக பொதுவான வேலைத் திட்டத்தை தோட்டங்களில் நடைமுறைப்படுத்தி அனைவருக்கும் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பசறை நிருபர்

Sat, 04/18/2020 - 10:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை