தலைநகரில் இருவாரமாக தவித்த இளைஞர்களை மீட்டு பாதுகாப்பாக தங்கவைத்த இ.தொ.கா.

ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொழும்பில் தங்குமிட வசதியின்றி இரண்டுவாரகாலமாக நிர்க்கதியாகியிருந்த மலையக இளைஞர்களுக்கு அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமூக வலைத்தளங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற செய்தியை அறிந்து உடன் செயற்பட்ட சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பணிப்புரையின் கீழ், பிரதமரின் இணைப்புச் செயலாளர் அமைச்சர் செந்தில் தொண்டமான் கொழும்பில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நிர்க்கதியான நிலையில் தங்கள் சொந்த இடங்களுக்கு மீள செல்லமுடியாது இருந்த இளைஞர்களை நேற்றுமுன்தினம் இரவு சந்தித்து அவர்களுக்கான உணவு வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

நேற்றுக் காலை அவர்களுக்குத் தேவையான தற்காலிக தங்குமிடங்கள் , உணவு மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை இலங்கை இந்திய சமுதாய பேரவையின் உதவியுடன் ஏற்பாடு செய்தும் கொடுத்திருந்தார்.

இதுதொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

அதேவேளை, அமைச்சர் தொண்டமான், இ.தொ.கா இளைஞர் பிரிவுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இ.தொ.கா இளைஞர் அணி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பங்களிற்கு நிவாரண பொருட்களை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.

Tue, 04/07/2020 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை