அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் கிளைகள் நுவரெலியாவில் இல்லை

பாரிய அசௌகரியங்கனை எதிர்கொள்ளும் மக்கள்

நுவரெலியாவில் நான்கு தேர்தல் தொகுதிகள் அமையப் பெற்றிருந்த போதிலும் எந்த ஒரு தொகுதியிலும் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் கிளைகள் இல்லாமையால் இங்கிருக்கின்ற மக்கள் தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் இது தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, ஹங்குரன்கெத்த, வலப்பனை, கொத்மலை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன.

இந்த நான்கு தேர்தல் தொகுதியிலும் வருமானம் குறைந்த பெருந்தோட்டங்களும் கிராமங்களுமே அமைந்திருக்கின்றன இந்த தேர்தல் தொகுதியில் கடந்த பல வருடங்களாக அரசாங்க மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் கிளைகளை அமைக்க வேண்டும் என அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஸ்ணன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய போதும் அது தொடர்பாக கடந்த அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் வசிக்கின்ற மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லாமையின் காரணமாக தங்களுடைய வருமானத்தை முழுமையாக பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலைமையில் அவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக மருந்து பொருட்களை தனியார் மருந்தகங்களில் சென்றே கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது பல மருந்து பொருட்களை அதிக விலை கொடுத்தே கொள்வனவு செய்கின்றார்கள்.

Tue, 04/07/2020 - 09:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை