கொரோனா வைரஸ் தடுப்பு; சீன அரசாங்கம் ரூ. 211 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் இலங்கைக்கு ரூ. 211 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும்  சுகாதார பாதுகாப்பு உபகரணங்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் இலங்கையிலுள்ள சீன பதில் தூதுவர் ஹு வெய் மேற்படி உபகரணங்களை கையளித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்திற்கு கொரோனா ஒழிப்பு வேலைத் திட்டத்தை பலப்படுத்தும் வகையில் சீன அரசாங்கம் மேற்படி உபகரணங்களை வழங்கியுள்ளது.

இதன்போது கொரோனா வைரஸ் தொடர்பில் சீன அரசாங்கம் மேற்கொண்ட வேலைத்திட்டம் தொடர்பான அறிக்கையும் பதில் சீன தூதுவரால் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி உபகரணங்களைபொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இங்கு கருத்து தெரிவிக்கையில்,

உலகின் பலம் மிக்க நாடான சீனா நீண்டகாலமாக இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. எமது நாடு நெருக்கடிக்கு உள்ளாகும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா எமக்கு உதவியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரண்டாவது தடவையாக சீனா தற்போது உதவியுள்ளதுடன் மேலும் ஒரு தொகை உதவிப் பொருட்களை வழங்குவதற்கு சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேற்படி உதவிகளுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேவேளை பாட்டா நிறுவனம் சத்திர சிகிச்சைகளுக்கு உபயோகிக்கப்படும் 1000 பாதணிகளை நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/28/2020 - 06:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை