புதிய வைரஸ் அலை குறித்து மீண்ட ஆசிய நாடுகள் அச்சம்

சீனா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரும் இரண்டாவது கொரோனா வைரஸ் அலை பற்றி அச்சம் அடைந்துள்ளன.

இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் முதல் முறை நேற்று வியாழக்கிழமை உள்நாட்டில் இருந்து எந்த வைரஸ் தொற்றும் பதிவாகவில்லை. இது பாரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் கடைசியில் வைரஸ் தொடங்கியது தொடக்கம் சீனாவில் உள்நாட்டில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படாத முதல் சந்தர்ப்பமாக இது உள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக இருந்த வூஹான் நகரில் புதிதாக எவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை. இந்தப் பிராந்தியம் கடந்த ஜனவரி தொடக்கம் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் சீனாவில் புதிதாக 34 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானபோதும் அவை அனைத்தும் அண்மைக் காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமே பரவியுள்ளது.

சிங்கப்பூரிலும் 47 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானபோதும் அவைகளில் 34 சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவையாகும். 30 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சிங்கபூரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் நேற்று புதிதாக 152 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு புதிய பாய்ச்சலை காட்டியுள்ளது. கடந்த ஒருசில தினங்களாக அந்நாட்டில் வைரஸ் தொற்று சம்பவங்கள் பெரும் வீழ்ச்சி கண்டு வந்தது. எனினும் இந்த புதிய எண்ணிக்கையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் விபரம் வெளியாகவில்லை.

ஜப்பானில் கடந்த புதனன்று மூன்று புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாயின. எனினும் அந்நாட்டில் 154 வைரஸ் தொற்று சம்பவங்களுடன் மோசமாக பாதிக்கப்பட்ட ஹுகைடோ பிராந்தியத்தில் அவசர நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாடுகளும் உள்நாட்டில் வைரஸ் தொற்று பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியபோதும் ஏனைய பகுதியில் இந்த வைரஸ் தீவிரம் அடைந்திருப்பது இந்த நாடுகளை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை