கொவிட்–19: சீனாவை நெருங்கும் இத்தாலி உயிரிழப்பு எண்ணிக்கை

ஈரானில் பலி 1000ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9000ஐ எட்டி இருப்பதோடு 220,994 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த டிசம்பர் கடைசியில் இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் நேற்று முதல் முறையாக ஒருவரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத நிலையில் இத்தாலியில் உயிரிழப்பு சீனாவை நெருங்கியுள்ளது.

இதில் கடந்த புதன்கிழமை முடிவில் இத்தாலியில் ஒரு நாளைக்குள் 475 பேர் உயிரிழந்து சுமார் 3,000 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது தொடக்கம் பதிவான அதிக உயிரிழப்பாக இது இருந்தது.

இத்தாலியில் மொத்தம் 35,713 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு இதில் 4,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். அங்கு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் லொம்பார்டி பிராந்தியத்தில் ஒரு நாளையில் 319 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொவிட்–19 வைரஸ் தொற்றினால் சீனாவில் இதுவரை 3,245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனாவை விடவும் அதிக வயதானவர்கள் வாழும் நாடான இத்தாலியில் 2,978 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இத்தாலியில் 60 மில்லியன் மக்கள் வாழ்கின்றன.

இந்த வைரஸ் வேறு வயது உடையவர்களை விடவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே உயிரிழப்பு வீதம் அதிகமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக தற்போது ஐரோப்பா மாறியுள்ளது. உறுதி செய்யப்பட்ட 200,000க்கும் அதிகமான வைரஸ் தொற்றுச் சம்பவங்களில் 80 வீதமானது ஐரோப்பா மற்றும் அதிகமாக ஆசிய நாடுகள் உள்ளடங்கும் மேற்கு பசிபிக் பிராந்தியத்திலேயே பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பெரும்பாலான நாடுகள் சமூக செயற்பாடுகளுக்கு கட்டுப்படுகளை கொண்டுவந்து எல்லைகளை மூடி, பயணத் தடைகளை கொண்டுவந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தமது நாட்டு குடிமக்கள் தவிர்த்து நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளது.

குறிப்பாக இத்தாலி கடந்த இரண்டு வாரங்களாக முடக்கப்பட்டுள்ளது. மக்களை வீட்டில் இருக்கும்படி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டபோதும் அந்நாட்டில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து மோசமாக பதிக்கப்பட்டிருக்கும் ஸ்பெயினில் 638 ஆக அதிகரித்துள்ளது. 14,769 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோன்று பிரான்ஸில் உயிரிழப்பு 264 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் இந்த நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் 8,198 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக உள்ளது.

அதே போன்று, பெல்ஜியத்தில் இந்த நோய்த்தொற்றால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்் 1,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடான ஈரானில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் அதிக உயிரிழப்பு கடந்த புதன்கிழமை பதிவானது. அன்றைய தினத்தில் 147 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நிலையில் ஈரானின் உயிரிழப்பு எண்ணிக்கை 1,135 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி ஈரானில் முதல் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது தொடக்கம் அந்நாட்டில் இந்த வைரஸுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 19,361 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்கின்றபோதும் அந்நாட்டில் கடைகளில் மக்கள் குவிந்திருப்பதோடு வீதிகள் வழக்கம்போல் சனநெரிசலுடன் காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ரஷ்யாவில் கொரோனா வைரஸினால் முதல் உயிரிழப்பு நேற்று பதிவானது. 79 வயதான பெண் ஒருவர் ஏற்கனவே சுகாதார பிரச்சினையில் இருந்த நிலையில் நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை தற்போது 176 ஆக அதிகரித்துள்ளது.

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை