கொவிட்–19: ‘மனிதகுல எதிரி’

புதிய கொரோனா வைரஸ் ‘மனிதகுல எதிரி’ என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200,000ஐ தாண்டியிருக்கும் நிலையிலேயே அந்த அமைப்பு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

“இந்தக் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் சந்திக்காத அச்சுறுத்தலை எமக்குத் தந்துள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ், ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“மனித குலத்திற்கு எதிரான பொது எதிரிக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைவது அவசியம்” என்று அவர் வலியுறுத்தினார்.

வைரஸ் தொற்றைக் கண்டறியும் சோதனையும், பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணும் முறையும் வைரஸ் பரவலை முறியடிப்பதில் முக்கியமான நடவடிக்கைகள் என்றார் அவர். மருத்துவச் சாதனங்களுக்கான சந்தையில் நியாயமான நடைமுறை பேணப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியது.

சுவாசக் கவசங்கள், உயிர்வாயுக் கலன்கள் ஆகியவற்றைக் கிடைக்கச் செய்ய சீனாவுடனும், ஏனைய உற்பத்தியாளர்களுடனும் பணியாற்றி வருவதாக அந்த அமைப்பு கூறியது.

வைரஸ் தொற்றை முறியடிக்கும் சாத்தியமுள்ள சிகிச்சை முறை, மருந்து ஆகியவை தொடர்பில் பல நாடுகளுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க துணை சஹாரா பிராந்தியத்தில் 233 நோய்த் தொற்று சம்பவங்கள் மற்றும் நான்கு உயிரிழப்புகளுடன் உலகில் மிகக் குறைவான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் பிராந்தியமாக உள்ளது. ஆனால் நிலைமை விரைவாக மாறக்கூடும் என்று டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

“குறித்த ஒரு புள்ளிக்குப் பின் ஏனைய நாடுகளில் வைரஸ் தீவிரம் கண்டது. எனவே மோசமான நிலைமைக்கு இன்றே தயாராவது தான் ஆபிரிக்காவுக்கு நாம் வழங்கும் சிறந்த அறிவுரை” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸை ஒடுக்குவதற்கு மற்றும் கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி உலக நாடுகள் “தனிமைப்படுத்தல், சோதனையிடல், சிகிச்சை அளித்தல் மற்றும் அடையாளம்காணல்” ஆகிய நடைமுறைகளை பின்பற்றுவதாகும் என்றும் டெட்ரோஸ் வலியுறுத்தினார்.

Fri, 03/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை