ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் பைடன் முன்னிலை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் ஜோ பைடன் தனது பிடியை இறுக்கியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மிச்சிகன் மற்றும் மேலும் மூன்று மாநிலங்களுக்கான வாக்கெடுப்புகளில் முன்னாள் துணை ஜனாதிபதி பைடன் வெற்றியீட்டி பிரதான போட்டியாளரான செனட்டர் பெர்னி சான்டர்ஸை பின்தள்ளியுள்ளார்.

இதன்மூலம் 77 வயதான பைடன் வரும் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிற்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். இந்த வெற்றியை அடுத்து கட்சியின் ஒன்றுமையை வலியுறுத்திய அவர் சான்டர்ஸ் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதன்படி பெண்கள், ஆபிரிக்க அமெரிக்கர்கள் உட்பட பரந்த ஆதரவாளர்களை பெற்ற பைடன் மிச்சிகன், மிசிசிப்பி, மிசெளரி மற்றும் இடாஹோவில் தமது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாவதற்கு மாநில அளவில் இடம்பெற்று வரும் உட்கட்சி தேர்தலில் 1,991 பிரதிநிதிகளை வெல்ல வேண்டி உள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி ஜோ பைடன் 820 பிரதிநிதிகளையும் சான்டர்ஸ் 670 பிரதிநிதிகளையும் வென்றுள்ளனர்.

அடுத்து மார்ச் 17 ஆம் திகதி 577 பிரதிநிதிகளுக்காக ஐந்து மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் நடைபெவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் இளம் வாக்காளர்களின் ஆதரவை பெற்றிருக்கும் 78 வயதான பெர்னி சான்டர்ஸ் தமது வேட்பாளர் போட்டியை தக்கவைத்துக்கொள்ள இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது தீர்க்கமானதாக அமையும்.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை