பொறுமையோடு காத்திருக்கும் கடவுள்

தவக்கால  சிந்தனை

இன்றைய நாளின் நற்செய்தியாக ‘கொடிய குத்தகைக்காரர் உவமை’ நமக்குத் தரப்படுகின்றது. இந்த உவமையில் கடவுளைத் தோட்ட உரிமையாளராகவும் சதுசேயர், பரிசேயர், சட்ட வல்லுனர்கள் போன்ற இஸ்ராயல் மக்களின் சமயத்தலைவர்களை குத்தகைக்காரர்களாகவும் இயேசு குறிப்பிடுகின்றார். தோட்ட உரிமையாளரான கடவுள் தனக்குரிய குத்தகையை வாங்கிவரத் தன் பணியாளர்களை அனுப்புகின்றார். குத்தகைக்காரர்கள் அந்தப் பணியாளர்களை அடித்துத் துன்புறுத்துகின்றனர். சிலரைக் கொலைசெய்கின்றனர்.

இங்கே பணியாளர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள் இறைவாக்கினர்கள் மற்றும் நீதித்தலைவர்கள் ஆவர். தோட்ட உரிமையாளர் இறுதியில் தன் மகனை அனுப்புகின்றார். அந்த மகனையும் பிடித்துத் துன்புறுத்திக் கொலை செய்கின்றனர். இந்த மகன்தான் இயேசு கிறிஸ்து.

இந்த உவமை வாயிலாக இயேசு நமக்குப் பலவித படிப்பினைகளைத் தருகின்றார். அதில் ஒரு படிப்பினையை மட்டும் இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்வோம். அதாவது இறைவன் நமது பாவங்கள், பலவீனங்கள், அநியாயங்கள், அட்டூழியங்கள் மட்டில் மிகந்த பொறுமை காக்கின்றார்.

நாம் மனம் மாற நமக்குச் சந்தர்ப்பத்தை, கால அவகாசத்தை நமக்கு வழங்குகின்றார். கடவுள் தரும் இந்த வாய்ப்பு வசதிகளை, சந்தர்ப்பங்களை எவ்வாறு நாம் பயன்படுத்துகின்றோம்? மனம் மாறுகின்றோம்? என்பது மிகவும் முக்கியமானது.

பாவிகள் அழிந்துபோகவேண்டும் என்பது கடவுளின் விருப்பமோ, திருவுளமோ அல்ல! மாறாக, அவர்கள் மனந்திரும்பி புதுவாழ்வு வாழவேண்டும் என்பதே அவரது விருப்பம். கடவுள் நம்மேல் அன்பும் அக்கறையும் உள்ளவர்.

நமது மனமாற்றத்திற்காக அவர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆகவேதான் அவர் மிகுந்த பொறுமையோடு இருக்கின்றார். கடவுளின் பொறுமையை நாம் இன்னும் சோதிக்கப்போகின்றோமா?

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை