முடங்கியது மட்டு. மாவட்டம்

தனிமைப்படுத்தும் நிலையமாக பற்றி கெம்பஸ்; கண்டித்து வர்த்தக நிலையங்கள் பூட்டு

பாடசாலைகள் வெறிச்சோட்டம் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணானை பகுதியில் அமைந்துள்ள பற்றி கெம்பஸை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்படுவதை கண்டித்து நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான், செங்கலடி உட்பட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் முற்றாக மூடப்பட்டதோடு, குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் மாணவர்கள் வருகை இன்மை காரணமாக பாடசாலை வெறிச்சோடிக் காணப்பட்டன.

அத்தோடு தனியார் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் என்பன மூடிக் காணப்பட்டதுடன், போக்குவரத்து மந்தகதியில் இடம்பெற்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர் உட்பட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் அனைத்திலும் வர்த்தக நிலையங்கள் தனியார் நிறுவனங்கள் பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டு இயல்பு நிலை ஸ்த்தம்பிதம் அடைந்தன. மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை அறிந்தும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளை மட்டக்களப்பு புணானை பல்கலைக் கழகத்தில் தடுத்து வைத்து கண்காணிக்கப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் சகல வழிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம்.

இங்கு ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு விடும். எனவே மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

கல்குடா தினகரன், புதிய காத்தான்குடி தினகரன், பெரியபோரதீவு தினகரன் நிருபர்கள்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை