மருத்துவ உபகரணங்களுக்கு உலகெங்கும் கடும் தட்டுப்பாடு

ஈரானில் ஆபத்தான சூழல்

கொரோனா வைரஸ் உயிரிழப்பு உலகெங்கும் அதிகரித்துவரும் நிலையில் வேகமாக பரவிவரும் அந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு உபகரணங்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுகள் அந்த உற்பத்திகளை 40 வீதம் அதிகரிக்கும்படியும் அது கோரியுள்ளது.

மறுபுறம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட வளர்ந்துவரும் நாடுகளுக்கு 12 பில்லியன் டொலர் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி உறுதி அளித்துள்ளது.

குறைந்த வட்டிக் கடன்கள், மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி உட்பட அவசர உதவிகள் இதில் உள்ளடங்கும். இந்த வைரஸினால் தமது நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதி அளித்திருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவே நாம் முயற்சி செய்து வருகிறோம்” என்று உலக வங்கி குழும தலைவர் டேவிட் மெல்பாஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கொவிட்–19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தென் கொரியா, ஜப்பான், ஐரோப்பா, ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருவதோடு புதிதாக மேலும் பல நாடுகளிலும் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. நிமோனியா காய்ச்சலை நோக்கிக் இட்டுச் செல்லக்கூடிய இந்த வைரஸ் தற்போது சுமார் 80 நாடுகளில் பரவியுள்ளது.

போதிய மருந்து விநியோகங்கள் இன்றி ஈரான் மருத்துவர்கள் மற்றும் தாதியர் அவதிப்பட்டு வரும் நிலையில் ஈரானில் இந்த வைரஸினால் 91 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு வெளியில் அதிக உயிரிழப்புக் கொண்ட நாடாக ஈரான் உள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் அனைத்து பாடசாலைகளும் நான்கு வாரங்களுக்கு மூடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவில் இந்த வைரஸினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் உயிரிழப்பு 79 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை மேலும் விரிவுபடுத்துவதற்கு இத்தாலி நிர்வாகம் அவதானம் செலுத்தி வருகிறது.

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் வைரஸ் தொற்றினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 2,260 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸில் நான்காவது கொரோனா வைரஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. உக்ரைன், ஆர்ஜன்டீனா மற்றும் சிலி நாடுகளில் முதல் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொவிட்–19 தொற்றியது உறுதி செய்யப்பட்டவர்களில் 3.4 வீதத்தினர் உயிரிழப்பதோடு இது 1 வீத உயிரிழப்பு நேரும் பருவகால காய்ச்சலை விடவும் மிக அதிகமாகும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

“கொவிட்–19 வைரஸானது காய்ச்சலைக் காட்டிலும் பரவும் திறன் குறைவு என்றபோதும் நோய்வாய்ப்படாத மக்களிடமிருந்து தொற்றுவதில்லை. எந்த ஒரு தடுப்பு மருந்து அல்லது சிகிச்சையோ இல்லாத நிலையில் இது காய்ச்சலை விடவும் கடுமையான நோய்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ், ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாடுகளைப் பொறுத்து இந்த வைரஸின் உயிரிழப்பு வீதம் 2 தொடக்கம் 4 ஆக இருப்பதாகவும் பதிவு செய்யப்படாத சிறு நோய்ச் சம்பவங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தோன்றியது தொடக்கம் மருத்துவ அடிப்படையிலான முகக் கவசங்களின் விலை ஆறு மடங்காக அதிகரித்திருப்பதோடு என்95 சுவாசக் கருவிகளின் விலை இரண்டு மடங்காகவும் பாதுகாப்பு ஆடைகள் இரு மடங்காகவும் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 89 மில்லிய முகக் கவசங்கள், 76 மில்லியன் கையுறைகள் மற்றும் 1.6 மில்லியன் ஜோடி பாதுகாப்புக் கண்ணாடிகள் தேவைப்படுவதாக அந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மத்திய சீன நகரான வூஹானில் தோன்றிய இந்தக் கொரோனா வைரஸ் தற்போது சீனாவை விடவும் வெளிநாடுகளில் அதிகம் பரவி வருகிறது.

உலகெங்கும் 91,000 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இதில் 80,000க்கும் அதிகமானவை சீனாவில் பதிவாகியுள்ளது. இந்த வைரஸினால் சீனாவில் உயிரிழப்பும் 2,946 ஆக உயர்ந்திருக்கும் அதேவேளை சீனாவுக்கு வெளியில் மேலும் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 129 பேருக்கே வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

சீனாவுக்கு வெளியில் மோசமாக நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நாடாக தென் கொரியா உள்ளது. அங்கு மேலும் 600 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 5000ஐ எட்டியுள்ளது. 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் பரவிய சூழலில் அந்நாட்டில் 100க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

மறுபுறம் ஈரானின் நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. அங்கு நோயாளிகளுக்கு போதுமான தேவையான சுவாசக் கவசங்கள் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் இல்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய நாடுகளை விடவும் ஈரானின் தேவைகள் அதிகமான இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அவசரத் திட்டங்களுக்கான தலைவர் மிக்கி ரியான் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தேசிய அவசரகால சேவைகளுக்கான தலைவர், 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனால் கூட்டத் தொடரை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அந்நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி அறிவித்துள்ளார். ஈரான் சிறையில் கொரோனா பரவும் ஆபத்தைத் தடுக்க தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ள 54 ஆயிரம் கைதிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. சிறைக் கைதிகளின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை அண்டை நாடான ஈராக்கில் கொரோனா வைரஸினால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 70 வயதான ஒருவர் சுலைமானியா நகரில் உயிரிழந்துள்ளார்.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை