ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் பைடன் முக்கிய மாநிலங்களில் வெற்றி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வுசெய்யும் 14 மாநிலங்களுக்கான உட்கட்சி தேர்தலில் 9 மாநிலங்களில் வெற்றியீட்டி ஜோ பைடன் அதிக முன்னேற்றம் கண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் முன்னாள் துணை ஜனாதிபதியான பைடன் டெக்சாஸ், வடக்கு கரோலினா, மசசுட்ஸ், மின்னசொட்டா, ஒக்லஹாமா, அர்கான்சஸ், அலபாமா, டென்னிசி மற்றும் விர்ஜினியா மாநிலங்களை கைப்பற்றியுள்ளார்.

எனினும் வாக்கெடுப்பு நடந்ததில் மிகப்பெரியதான கலிபோர்னியா மாநிலம் மற்றும் மேலும் மூன்று மாநிலங்களில் பெர்னி சான்டர்ஸ் தனது வெற்றியை நெருங்கியுள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் வெற்றிபெறுபவர் வரும் நவம்பரில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

இதில் முன்னாள் நியூயோர்க் மேயர் ப்லுௗம்பேர்க் அரை பில்லியனுக்கும் அதிகமான தனது சொந்தப் பணத்தை செலவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் ஒரு மாநிலத்தில் கூட வெற்றியீட்டவில்லை.

வரும் ஜூலை மாதம் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு தேவையான 1,991 பிரதிநிதிகளில் 1,300க்கும் அதிகமான பிரதிநிகளை பெறக்கூடிய இந்த செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பில் பைடன் 396 பிரதிநிதிகளையும் சான்டர்ஸ் 314 பிரதிநிதிகளையும் வென்றிருப்பதாக பிந்திய வாக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

2020 தேர்தலில் தீர்மானிக்கும் மாநிலமாக கருதப்படும் விரிஜினியா மற்றும் வடக்கு கரோலினா தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது. இதில் ஜனநாகக் கட்சியின் முக்கிய வாக்கு வங்கிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆபிரிக்க–அமெரிக்க வாக்காளர்கள் பைடனுக்கு அதிக ஆதரவு வழங்கியுள்ளனர்.

“நாம் அதிக உயிரோட்டத்தோடு உள்ளோம்.

இந்தப் பிரசாரம் டொனால்ட் டிரம்்பை வெளியேற்றும், அதில் சந்தேகம் வேண்டாம்” என்று லொஸ் ஏஞ்சல்ஸில் தமது ஆதரவாளர்கள் முன் பைடன் குறிப்பிட்டார்.

எனினும் தனது இடது சாரி செனட்டரான சான்டர்ஸ் தனது சொந்த மாநிலமான வெர்மொன்ட், கொலராடோ மற்றும் உத்தாவில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் பைடனுக்கு கடும் போட்டியாக நீடித்து வருகிறார்.

“அரசியல் ஸ்தாபனத்தை நாம் கைப்பற்றுவோம். அதே பழைய, அதே வகையான அரசியலுடன் டிரம்ப்பை தோற்கடிக்க முடியாது” என்று சான்டர் தனது ஆதரவாளர்கள் முன் தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்ப் தனது இரண்டாவது தவணைக்கு வெற்றி பெறுவதைத் தவிர்ப்பதற்கு தமது கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக பைடன் அல்லது சான்டர்ஸை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பராக் ஒபாமாவின் துணை ஜனாதிபதியான 77 வயது பைடன் ஒரு மிதவாதியாகப் பார்க்கப்படும் நிலையில் 78 வயதான சான்டர்ஸ் எதிர்கால அமெரிக்கா பற்றி தமது வித்தியாசமான பார்வையை வழங்கி வருகிறார்.

அடுத்த உட்கட்சித் தேர்தல் வரும் மார்ச் 10 ஆம் திகதி 352 பிரதிநிதிகளுக்காக மிச்சிகன், வொசிங்டன் ஸ்டேட், இடாஹோ, மிசிசிப்பி, மிசூரி மற்றும் வடக்கு டகோடா மாநிலங்களுக்காக நடைபெறவுள்ளது.

Thu, 03/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை