கோடீஸ்வரனுக்கு ஆசனம் ஒதுக்க ரெலோ எதிர்ப்பு

கோடீஸ்வரனுக்கு தமிழரசு கட்சி ஆசனம் வழங்கினால் நாம் எதிர்ப்போம் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று வவுனியா கணேசபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

பாராளுமன்றத் தேர்தலில் கோடீஸ்வரன் தமிழரசு கட்சியில் போட்டியிடுவதற்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். இதன்மூலமாக கோடீஸ்வரன் தொடர்ந்தும் எமது கட்சியில் இருக்க முடியாது. அதேவேளை தமிழரசு கட்சியும் ஒரு பங்காளிக் கட்சி என்ற ரீதியில் கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குவது என்பது ஜனநாயக மீறலாகும்.

மூன்று கட்சிகள் ஒன்றினைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிலே ஜனநாயகம் பேணப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் ஜனநாயகத்திற்காக உழைக்கின்ற நாம் எமக்குள் ஜனநாயகத்தை பேண வேண்டும். ஆகவே தமிழரசு கட்சி கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குமாக இருந்தால் நாம் அதை எதிர்ப்போம்.

பிரிந்து இருக்கின்ற சமூகமாக எங்களுடைய தமிழ் சமூகம் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலிலே ஒற்றுமையை காட்டிய தமிழ் சமூகம் இம்முறை பாராளுமன்ற தேர்தலிலும் ஒற்றுமையாக இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

வவுனியா விசேட, வவுனியா நிருபர்கள்

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை