கொரோனா பாதிப்புக்குள்ளான இருவருடன் உறவினர் உட்பட 64 பேர் தீவிர கண்காணிப்பில்

17 வைத்தியசாலைகள் தயார் நிலையில்

பரிசோதனைக்கு தனியார்  வைத்தியசாலைகளுக்கும்  அனுமதி வழங்க ஆலோசனை

கொவிட்- 19 என்ற கொரோனா வைரஸுடன் அடையாளம் காணப்பட்டுள்ள இருவரதும் உறவினர்கள் 13 பேர் உள்ளிட்ட 64 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக சுகா தார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் நாட்டுப் பயணிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் நேற்று முதல் தடைவிதித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தூரப்பயணங்கள் மற்றும் சனநெரிசல் மிக்க கூட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரச ஊடகங்களால் வழங்கப்படும் உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டும் பின்பற்றுமாறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுஹேவா கேட்டுக் கொண்டார்.

கொவிட்- 19 பற்றிய தகவல்களை வழங்குவதற்காக நேற்று தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு  இலங்கை பிரஜைகளுக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த டொக்டர் அனில் ஜாசிங்க, கடந்த சில தினங்களுக்குள் அவர்களுடன் தொடர்பை வைத்திருந்தவர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தத்தமது வீடுகளிலேயே தனிமையாக இருப்பது இக்காலப்பகுதிக்கு பொருத்தமாக இருக்குமென்றும் வலியுறுத்தினார்.

அத்துடன் மக்களின் வசதிகருதி கொவிட்-19 க்கான மருத்துவ சோதனைகளை விலைக்கட்டுப்பாடு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்ததாவது-

அடையாளம் காணப்பட்ட

இலங்கை பிரஜைகள்

இலங்கையில் இதுவரை இருவர் கொவிட்-19 உடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சுற்றுலா வழிகாட்டிகள். இவர்கள் இருவரும் ஒரே அறையிலேயே அருகருகிலுள்ள கட்டில்களில் உறங்கியுள்ளனர்.இதில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் 52 வயதானவர். இவர் குறிப்பிட்ட காலப்பகுதியில் 60 பேருடன் தொடர்புகளை கொண்டுள்ளார். அவரது குடும்ப அங்கத்தவர்கள் 05 பேர் தற்போது வைத்தியசாலையில் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாவதாக அடையாளம் காணப்பட்டவர் 44 வயதானவர். அவர் குறிப்பிட்ட காலப்பகுதியில் 25 பேருடன் தொடர்புகளை வைத்திருந்துள்ளார். அவர்களுள் எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அநேகமானோர் சிறுவர்கள்.

கொவிட்-19 இருக்கலாமென

சந்தேகிக்கப்படுபவர்கள்

அடையாளம் காணப்பட்ட உறவினர்கள் உள்ளிட்ட 64 பேர் நாடு முழுவதுமுள்ள 17 வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை அரசாங்க வைத்தியசாலைகளில் மட்டுமே கொவிட்-19க்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த 17 வைத்தியசாலைகளுக்கும் அவசியமான மருத்துவ உபகரணங்களை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம். உலக சுகாதார நிறுவனம் சுமார் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உபகரணங்களை பெற்றுத்தர முன்வந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கராபிட்டிய வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் வடகொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றிலேயே இதற்கான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அறிகுறிகள் மற்றும் மருந்து

கொவிட்-19 க்கான அறிகுறிகளென எதையும் திட்டவட்டமாக கூறமுடியாது. சாதாரண உடல் உபாதைகளுக்கு வழமையான மருந்துகளையே நாம் வழங்குகின்றோம். இதற்கென தனியான மருந்துகள் இல்லை. தேவையான மருந்துகள் தற்போது கையிருப்பிலுள்ளன.

சீனர்களுக்கு கொவிட்-19

அபாயம் குறைவு

சீனாவில் தற்போது கொவிட்-19க்கான அபாயம் குறைவடைந்துள்ளது. அத்துடன் அபாயம் அதிகரித்து காணப்படும் ஹூபெய் மாகாணத்திலிருந்து எவரும் வெ ளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சீனாவின் ஏனைய பிரதேசங்களில் தற்பொது இதன் தாக்கம் குறைவடைந்திருப்பதனால் நாம் சீனர்கள் குறித்து அச்சப்படத்தேவையில்லை.

மார்ச் 11 ஆம் திகதியன்று 4,794 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 3,035பேர் இலங்கையர்களென்றும் 1153பேர் சீனர்களென்றும் அவர் தெரிவித்தார்.

 

லக்ஷ்மி பரசுராமன்

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை