ரவி, அலோசியஸ் நீதிமன்றில் ஆஜர்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி;

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் ஜோசப் அலோசியஸ் உள்ளிட்ட ஏழுபேரை நேற்று மாலை 4 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதேவேளை நீதிமன்றத்தில் ஆஜராகும் ஏழ்வர் மீதும் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாமென்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு நேற்று அறிவித்தது.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேரால் தாக்கல் செய்யப்பட்ட றிட் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னரே இருதரப்புக்கும் பாதிப்பின்றிய வகையில் இத்தீர்மானத்தை முன்வைப்பதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு தெரிவித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய மனுதாரர்களான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் ஆலோசியஸ், கசுன் பளிசேன, ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், ரஞ்சன் ஹூலுகல்ல, எஸ்.பத்மநாபன், இந்திக்க சமன் குமார ஆகிய ஏழ்வரும் நேற்று மாலையளவில் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜரானதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர்.

ஏழு றிட் மனுக்களும் மீண்டும் மார்ச் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை