உருளைக்கிழங்கு கொள்கலனில் 100 கிலோ ஹெரோயின்

பாகிஸ்தான் பிரஜை உட்பட 11 பேர் கைது

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்குகளுடன் சுமார் 100 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்கலனுடன் சொகுசு வாகனத்தில் பயணித்த பாகிஸ்தான் பிரஜையொருவருடன் மேலும் 6 பேர்  பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வென்னப்பு, லுனுவில பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட கொள்கலனை பொலிஸார் நேற்று முன்தினம் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் மடக்கிப்பிடித்தனர்.

இதில் உருளைக்கிழங்குகளுடன் உருளைக்கிழங்குகள் வடிவில் சூட்சுமமாக தயாரிக்கப்பட்ட ஹெரோயின் உருண்டைகள் 25 மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை விளையாட்டு மைதானத்துக்கு கொண்டு சென்ற கொள்கலனை பொலிஸார் சோதனையிட்டபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டன.

கிழங்கு இறக்குமதி செய்த நிறுவனத்திலிருந்து மூன்றுபேரும் கொள்கலளை எடுத்துச் செல்வதற்காக துறைமுகத்துக்கு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

கொழும்பிலிருந்து கொண்டு சென்ற பாரவூர்தியை நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொச்சிக்கடை நகர சபை மைதானத்துக்குள் கொண்டு சென்று அதிலுள்ள மூடைகளை சோதனை செய்தபோது அதில் 26 ஆயிரம் (26,000) கிலோ உருளைக் கிழங்குகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதில் 25 மூடைகளில் உருளைக்கிழங்குகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றினர்.

ஹெரோயின் போதைப் பொருள் பொலித்தீன்களால் பொதி செய்யப்பட்டு உருளைக்கிழங்கு வடிவில் பொதி செய்யப்பட்டிருந்தன.இவற்றை பார்க்கும்போது உருளைக்கிழங்கு போன்றே காட்சியளித்தன. எனினும் சாதாரண உருளைக்கிழங்கைவிட சற்று பெரிதாக காணப்பட்டன.

உருளைக்கிழங்குகள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 99 கிலோ 478 கிராம் ஹெரோயின் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை போதைப் பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்கள் மாரவில மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.

 

நீர்கொழும்பு நிருபர்

Sat, 03/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை