வயதுக்கட்டுப்பாட்டை நீக்கி அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்க வேண்டும்

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள்

கடந்த 06 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஊடக அறிக்கையில் பட்டதாரி பயிலுநர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் 35 வயதுக்கு மேற்பட்ட தொழிலற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த விடயத்திற்கு எதிராக அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மூலமாக கொழும்பு கோட்ட்டை புகையிரத நிலையத்தில் திங்கட்கிழமை(10) காலை 10 மணிக்கு ஒன்றுகூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறோம். எனவே இதில் வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட வருமாறு அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர்  என்.எம்.எம். றியாஸ் அழைப்பு விடுத்தார்.

கடந்த அரசாங்கம் 45 வயதுக்குட்டபட்ட பட்டதாரிகளுக்கு எவ்வாறு தொழில் வழங்கியதோ அதே போன்று இந்த அரசாங்கமும் தொழில் வழங்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு வரையுள்ள 45 வயதுக்குட்பட்ட அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரசாங்கம் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் இழுத்தடிப்புக்களினாலும் உரிய காலத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்காததினாலும் எமது வேலையற்ற பட்டதாரிகள்  தமது வயதுகளைக் கடந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்றிருக்கின்றனர். இவர்களில் 500 க்கு மேற்பட்டோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். இந்த வயது கட்டுப்பாட்டால் இந்த பட்டதாரிகளின் எதிர்காலம், அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எனவே அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வரு முன்னர் உள்வாரி, வெளிவாரி, டிப்ளோமாதாரி மற்றும் வயது கட்டுப்பாடு என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் தொழில் வழங்குவோம் என கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தெரிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றி அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கி அவர்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள்  விடுத்தார்.   

Sun, 02/09/2020 - 11:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை