கட்சி செயலாளர்கள், பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்திப்பு

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தல், 2019ஆம் ஆண்டின் புதிய வாக்காளர் இடாப்புத் திருத்தம் மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் ரிஸாம் ஹமீட் தெரிவித்தார். இக்கூட்டம் நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதேவேளை மாவட்ட ரீதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் சிறிய மாற்றம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி மாவட்டத்தில் ஒரு உறுப்பினரைக் குறைத்தும் பதுளை மாவட்டத்தில் ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகின்றது. இது தவிர ஏனைய மாவட்டங்களில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை.

இது இவ்விதமிருக்க 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர்  இடாப்புத் தயாரிப்புப் பணிகள் முற்றுப் பெற்றிருப்பதாகவும் புதிதாக இரண்டு இலட்சத்தி 70 ஆயிரம் பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது.2018 ஆம்’ ஆண்டின் வாக்காளர் எண்ணிக்கை 1,59,92096 ஆகக் காணப்பட்டது.

2019க்கான வாக்காளர் எண்ணிக்கை ஒருகோடியே 63 இலட்சத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எம். ஏ. எம். நிலாம்

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை