எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள அரசு தயார்

 கூட்டத் தொடர் நேற்று ஆரம்பம்
​ அமைச்சர் தினேஷ் நாளை உரை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது தனிநபர்களால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகிய மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ள செல்வதற்கு முன்னர் கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள பௌத்த காங்கிரஸ் மண்டபத்தில் தேரர்களிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். வழிபாடுகளை நிறைவுசெய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டமை இலங்கையின் அரசியலமைப்பை முற்றிலும் மீறய செயற்பாடாகும். மக்களின் அனுமதியின்றியே இவ்வாறு இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை வாபஸ் பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானம் எடுத்ததுள்ளது. எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசம் பூட்டியுள்ள விலங்கை நாம் அகற்ற வேண்டும். இதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது.

நாட்டுக்கு எதிராக கடந்த அரசாங்கம் செயற்பட்டதாலே எவ்வாறான நிலைமையை எதிர் கொண்டுள்ளோம். நாட்டுக்கு எதிரான கருத்துகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து வருகிறது. எமது அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறும் உத்தியோகபூர்வ அறிவிப்பு பேரவையில் நாளை அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று இதன் நிமித்தம் ஜெனிவா நோக்கி பயணமாகியுள்ளது.

30/1 தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெற எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாளை 26ஆம் திகதி பேரவைக்கு வெளிவிவகார அமைச்சர் அறிவிக்கவுள்ளதாக கடந்த சனிக்கிழமை வெளி விவகார அமைச்சின் செயலர் ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் நேரில் எடுத்துரைத்திருந்தார்.

ஜெனிவா செல்லும் வெளி விவகார அமைச்சர் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியமை சுட்டிக்காட்டத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 02/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை