கொரோனா வைரஸின் நாளாந்த உயிரிழப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரிப்பு

பிறந்த குழந்தைக்கு முதல்முறை நோய் தாக்கம்

புதிய கொரோனா வைரஸினால் சீன பெருநிலத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை நேற்று மேலும் 73 ஆல் அதிகரித்து மொத்தம் 563 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நாளாந்த உயிரிழப்பு அதிகரிப்பாகும்.

சீனாவின் பல நகரங்களும் முடக்கப்பட்டு உலகெங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இந்த நோய்க்கு தடுப்பு மருந்தொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈபட்டுள்ளனர்.

புதிய வைரஸின் மையப்பகுதியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்தில் மேலும் 70 பேர் உயிரிழந்து 2,978 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் டன்ஜின் நகர் மற்றும் குயிசு மாகாணங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மத்திய சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் விமானநிலையங்கள் மூடப்பட்டு வீதிகள் முடக்கப்பட்டு கடந்த இரு வாரங்களாக நகரம் முற்றுகை இடப்பட்ட நிலையில் உள்ளது. ஹுபெய் மாகாணத் தலைநகரான வூஹானில் இருக்கும் கடல் உணவுச் சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் தொற்றியிருப்பதாக நம்பப்படுகிறது.

சீன பெருநிலத்திற்கு வெளியில் இதுவரை பிலிப்பைன்ஸ் மற்றும் ஹொங்கொங்கில் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இருவரும் வூஹான் நகருடன் தொடர்புடையவர்களாவர்.

வூஹான் நகரில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டு உலகெங்கும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர். ஹொங்கொங் மற்றும் ஜப்பானில் ஆயிரக்கணக்கான கப்பல் பயணிகன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் யொகோஹாமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் டயமண்ட் பிரின்சஸ் ஆடம்பரக் கப்பலில் உள்ள மேலும் பத்துப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தக் கப்பலில் மொத்தம் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இந்தக் கப்பலில் இருந்த 80 வயது ஹொங்கொங் நாட்டவர் ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கப்பலில் இருக்கும் சுமார் 3,700 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மறுபுறம் ஹொங்கொங்கில் இருக்கும் மற்றொரு சொகுசுக் கப்பலில் மூவருக்கு வைரஸ் தொற்றிய நிலையில் கப்பலில் இருக்கும் 3,600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குழந்தைக்கு வைரஸ்

சீனாவில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு 30 மணிநேரத்திற்கு பின் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றிய இளம் வயது கொண்டவராக இந்த குழந்தை பதிவாகியுள்ளது.

வைரஸ் மையம் கொண்ட வூஹான் நகரில் கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி பிறந்த குழந்தைக்கே வைரஸ் தொற்றியுள்ளது.

குழந்தை பிரசவிக்கும் முன்னரே அதன் தாய்க்கு நோய் தொற்றி இருந்தது. இந்நிலையில் கருப்பையில் அல்லது பிரசவத்திற்கு பின்னர் வைரஸ் தொற்றி இருப்பது பற்றி இன்னும் தெளிவு இன்றி உள்ளது. குறிப்பிடும்படியான எண்ணிகை கொண்ட சிறுவர்களுக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளது.

பிறக்கும்போது 3.25 கிலோகிராம் எடையுடன் இருந்த இந்தக் குழந்தை ஸ்திரமான உடல்நிலையோடு இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தற்போது 49 மற்றும் 56 வயதுக்கு இடைப்பட்டவர்களையே கணிசமாக தாக்குவதாக அமெரிக்க மருத்துச் சங்கம் குறிப்பிட்டிருப்பதோடு சிறுவர்களுக்கு நோய் தொற்றுவது அரிது என்று தெரிவித்துள்ளது.

இந்த வைரஸினால் சீனாவுக்கு வெளியில் 25 நாடுகளில் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசர நிலை ஒன்றை பிரகடனம் செய்துள்ளது. அந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ், வைரஸை எதிர்கொள்ளும் மூன்று மாத திட்டத்திற்கு 675 மில்லியன் டொலர் நிதியை கோரியுள்ளார்.

வைரஸில் இருந்து பாதுகாப்புப் பெற உதவி தேவைப்படும் நாடுகளுக்கு இந்த நிதியின் அதிக தொகை செலவிடப்படவுள்ளது. 500,000 முகக் கவசங்கள் மற்றும் 40,000 சுவாசக் கருவிகள் 24 நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இதனிடையே இந்த வைரஸுக்கு எதிராக மருந்துகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்வரும் பெப்ரவரி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நூற்றுக்கணக்கான நிபுணர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூடவுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் பன்னாட்டு குழு ஒன்று மிக விரைவில் சீனா செல்லவிருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த வைரஸுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்புகள் பற்றி உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் டாரிக் ஜெசரோவிக்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்த 2019–nCoV (வைரஸ்) இற்கு எதிராக பயனுள்ள சிகிச்சைகள் இன்னும் இல்லை” என்றார்.

இதில் வைரஸ் தொற்றிய பெரும்பாலானவர்கள் சிறிய நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தி விரைவாக சுகம்பெறும் அதேவேளை இந்த வைரஸ் நிமோனியா மற்றும் ஏனைய சுவாச நோய்களுக்கு இட்டுச்செல்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சீனாவிலிருந்து வருபவர்களை கட்டாயமாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த ஹொங்கொங் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா சீனாவில் உள்ள தனது நாட்டவர்களை மீட்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த புதனன்று வூஹான் நகரில் இருந்து 2 விமானங்களில் அமெரிக்கர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதுபோன்று மற்ற நாடுகளும் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவர்களை மீட்டு வருகிறது. காய்ச்சல் இருப்பவர்களை மட்டும் திருப்பி அனுப்ப சீனா மறுக்கிறது. மற்ற பயணிகள் செல்வதற்கு சீனா அனுமதித்துள்ளது.

அதே நேரம் சீனர்கள் தங்களது மாநிலங்களை விட்டு அடுத்த மாநிலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹுபெய் மாகாணத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் எந்ததெந்த வீடுகளில் பதுங்கி உள்ளனர் என்று அனைத்து மாவட்டங்களிலும் சீனா இராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை