கிராமப்புற வெற்றிடங்களை இலக்காகக் கொண்டே பட்டதாரி நியமனங்கள்

கிராமப்புறங்களில் நிலவும் வெற்றிடங்களை இலக்காக கொண்டே இம்முறை பட்டதாரி நியமனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நியமனம் பெறும் பட்டதாரிகளுக்கு எக்காரணம் கொண்டும் ஐந்து வருடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படக்கூடாது என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டியது கட்டாயமென்பதால் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் நியமனம் பெறும் அனைவரதும் முதல் ஐந்து வருடங்களுக்கான இடமாற்றங்களை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பட்டதாரிகள் கடந்த 2012ஆண்டு முதல் எட்டு வருடங்களாக நிரந்தர வேலையில்லாமல் பாரிய திண்டாட்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு மார்ச் 01ஆம் திகதி முதல் அரசாங்க தொழில் வழங்கப்படும். எனினும் முதல் ஒரு வருடம் அவர்களுக்கான பயிற்சி காலமாகவே கருதப்படும். 

அதனடிப்படையில் 2020மார்ச் 01ஆம் திகதி முதல் 2021மார்ச் 01ஆம் திகதி வரையான ஒரு வருட காலத்தில் அவர்களுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து அவர்கள் தங்களுக்குரிய வேலைகளில் நிரந்தரமாக்கப்படுவர்.

பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும்போது இன,மொழி,மத,கட்சி,அரசியல் பேதமின்றி அனைவருக்கும் வெற்றிடங்களடிப்படையில் தொழில் வழங்கப்படும். வனஜீவராசிகள் திணைக்களம், சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல திணைக்களங்களில் வெற்றிடங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக கிராமபுறங்களில் உள்ள திணைக்களங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களின் தேவை அதிகரித்துள்ளது. மக்களின் வரிப் பணத்திலேயே அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது. உயர் தொழில்நுட்பம் சம்பந்தமான டிப்ளோமாக்களை செய்துள்ளவர்களும் இப்பட்டதாரிகளுக்கு சமனாக கருதப்பட்டு அரசாங்க நியமனங்களுக்கு உள்வாங்கப்படுவர் என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Sat, 02/08/2020 - 09:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை