வயதெல்லையை 45 ஆக உயர்த்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் வயதெல்லையை 45ஆக உயர்த்துமாறு பட்டதாரிகள் தேசிய நிலையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவைக்கு சேர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய 35வயதுக்குட்பட்டவர்களை இணைத்துக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டிருப்பதை 45வயதாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் தேசிய நிலையம் நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இத் திட்டத்தின் கீழ் 50,000பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில் இதனை துரிதமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்தத் திட்டத்தை வரவேற்றிருக்கும் பட்டதாரிகள் தேசிய நிலையம், ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில், நீங்கள் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் முக்கியமானதாகவே கருதுகின்றோம்.

ஆனால், இந்த ஆட்சேர்ப்பு திட்டத்தில் காணப்படும் விதிமுறைகள் முரண்பாடாகக் காணப்படுவதை உணர்கின்றோம். சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தில், 45வயதையுடைய பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவரென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சரவை தீர்மானத்தின்படி அந்த எல்லை 35வயதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2015, 2019 காலப் பகுதியில் வேலையற்ற பட்டதாரிகள் ஒரு முறையற்ற விதத்திலேயே அரச சேவைக்கு இணைத்து கொள்ளப்பட்டனர். அந்த ஐந்தாண்டு காலத்தில் 35 வயதைத் தாண்டிய பட்டதாரிகளுக்கு அநீதியிழைக்கப்பட்டதாகவே நாங்கள் கருதுகின்றோம். எனவே தான் நாங்கள் வேலையற்ற பட்டதாரிகளின் வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துமாறு உங்களிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

எம்.ஏ.எம். நிலாம்

 

 

Sat, 02/08/2020 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை