வாகன அனுமதிப்பத்திர ஸ்மார்ட் கார்ட் முறைகேட்டை ஆராய்வதற்கு விசேட குழு

வாகன அனுமதிப்பத்திரத்துக்காக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்ட் விநியோக முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமித்து அதில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி பி. எம்.பி. நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜயதிஸ்ஸ எம்.பி தமது கேள்வியின் போது, ஸ்மார்ட் கார்ட் வழங்கும் மெட்ரோ போலியன் நிறுவனம் 200 ரூபா பெறுமதியான அட்டைகளை ஆயிரத்து 700 ரூபாவுக்கு பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. இது ஒரு பெரும் மோசடியாகும்.

இந்த நிலையை மாற்றுவதற்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கும் பொறுப்பை அந்தக் கம்பெனியிடமிருந்து நிறுத்தி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் இவ்வளவு காலமும் பாவனையாளர்களிடம் அந்த நிறுவனம் பெற்றுக்கொண்ட 1, 700 ரூபாவை மீள் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

2009ஆம் ஆண்டில் தான் மேற்படி நிறுவனம் அந்த செயற்பாட்டை ஆரம்பித்தது. அதனை ஒரு உடன்படிக்கை மூலம் அரசாங்கத்துக்கு சுவீகரிக்க முடியுமான போதும் எக்டா நிறுவனம் பல்வேறு காரணங்களைக் காட்டி அதனைத் தடுத்தது.

எவ்வாறாயினும் நாட்டில் மிக மோசமான மோசடிகளில் ஈடுபடும் நிறுவனமாக மோட்டார் வாகன போக்குவரத்து நிறுவனம் பேசப்படுகிறது. அந்த நிலையை மாற்றி எதிர்வரும் மூன்று வருடத்துக்குள் சிறந்த நிறுவனமாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை