நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் அபாயம்

நாடு பாரதூரமான பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்ந்து வருவதுடன், நீண்டகாலம் செல்வதற்கு முன்னர் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுசென்று விடும் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என கேள்வியெழுப்புகின்றனர். கடந்த நான்கரை வருடத்தில் 10 இலடசம் வேலைவாய்ப்புகளை வழங்கினோமா? இல்லையா? என்பதற்கு அப்பால் வரலாற்றில் வேலையற்றோர் சதவீதத்தை குறைத்த அரசாங்கமாகவிருந்தோம்.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசியல் ரீதியாக எவரும் பழிவாங்கப்படவில்லை. எவரின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்படவில்லை. நாம் அரசியல் ரீதியாக வேலைவாய்புகள் கொடுத்தோம் என்கிறார்கள். இலங்கையர்களுக்குதான் வேலைவாய்ப்புகளை வழங்கினோம். வெளிநாட்டவர்களுக்கு அல்ல. ஆகவே, எவரையும் அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டாம்.

பாரிய வாக்குறுதிகளை கொடுத்துதான் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகர்கிறது. சுபீட்சமான நாடு எனக் கூறி பல்வேறு வரிகளை நீக்கியிருந்தனர். இதனால்தான் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரி குறைப்பின் காரணமாக 500 அல்லது 600 பில்லியன்வரை அரச வருமான இழப்பபு ஏற்பட்டுள்ளது. தேசிய வருமானத்தில் இது 25 சதவீதமாகும். வற் வரி குறைப்பால் மாத்திரம 180 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய வருமான திணைக்களம் கூறியுள்ளது.

அரசு வரிகளை குறைத்துள்ள போதிலும் மக்களுக்குச் சலுகைகள் கிடைக்கவில்லை. வரி திருத்தச்சட்டங்கள் எங்கே என அதிகாரிகள் கேட்கின்றனர். வரி திருத்தங்களுக்கான அங்கீகாரம் பாராளுமன்றில்தான் கொடுக்க வேண்டும். இதுவரை திருத்தச்சட்டங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. வரி குறைப்பால் எவ்வளவு அரச வருமான இழக்கப்பட்டுள்ளதென பிரதமர் பாராளுமன்றுக்கு வெளிப்படுத்த வேண்டும். குறைக்கப்பட்ட வரியால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை எவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ள போகின்றனர் எனத் தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 02/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை