தமிழர் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்க மாட்டோம்

தமிழீழ விடுதலை இயக்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ எமது மக்களின் உரிமைகளை யாருக்கும் அடமானம் வைக்காதென்பதை, உறுதியாகக் கூறவிரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ரெலோவின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அவர்,

எமது தலைவர்களது தியாகம் மக்களது விடுதலை என்ற இலட்சியத்துடனே இருந்தது. அரசாங்கத்தை அரவணைத்து போகும் சிந்தனையில் அவர்கள் இருக்கவில்லை.அவர்களது அத்திவாரத்தில் பயணிப்பதாலே எமது கட்சி வலுவாக உள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த கூடாதென்று கருதிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கமே.

சகோதர படுகொலைகளின் பின்பு நாங்கள் (ரெலோ) இல்லை என்று பலர் கருதினார்கள். நாம் மீண்டும் வந்து புலிகளுடன் இணைந்து செயற்பட்ட வரலாற்றை இங்கு நினைவு கூருகிறேன். விடுதலைப் புலிகள் ஏதாவது தாக்குதல் நடத்தினால் அடுத்த அடி, எமது முகாம்களுக்கு வந்தமை அனைவருக்கும் தெரியும்.

எமது இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து வந்த அரசாங்கங்களிற்கு எதிராகவே இருந்தன.

ஆட்சியாளர்களுக்கு சோரம்போகாததாலே கூட்டமைப்பு இன்றும் மக்களின் சக்தியாகத் திகழ்கிறது.

கூட்டமைப்பை உருவாக்கியதிலே எமது பங்கு கூடுதலாக இருந்தது. கிழக்கில் சிவராம் மற்றும் பத்திரிகையாளர்கள் அந்த முயற்சியை எடுத்த போது, கூடுதலாக நான் அவர்களோடு இருந்தவன்.

இன்று கூட்டமைப்பை திட்டித் தீர்ப்பவர்கள் புதிதாக முளைத்தவர்கள். இவர்களுக்குப் பதில் சொல்ல தேவையில்லை. இனப் பிரச்சினை தீர்வுக்காக பலவிட்டுக் கொடுப்புகளை செய்தோம். நாம் அடிவருடிகளாக அரசாங்கத்துடன் என்றும் செயற்படவில்லை. நாம் இனவாதிகள் அல்ல என்ற நோக்கத்தோடு பெரும்பான்மை இனத்தை சார்ந்தவருக்கு வாக்களித்தோம். எமது நல்ல சமிஞ்சையை ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி தயாரில்லை. அதன் பின்னணியிலே வடக்கு, கிழக்கில்சோதனை சாவடிகள் முளைத்துள்ளன. இந்த சோதனைச் சாவடிகளை நிறுத்த முடியாத, சிலர் அரசாங்கத்துடன் இருக்கின்றனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்கா திருப்பி அனுப்புகின்றமை, எமக்கான காலம் கனிந்திருப்பதற்கான செய்தி என்றார்.

கோவில்குளம் குறூப், வவுனியா விசேட நிருபர்கள்

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை