எதிர்க்கட்சி தலைவர் சஜித்தின் தேசப்பற்று தமிழ்க் கூட்டமைப்புக்கும் இருக்க வேண்டும்

இராணுவத் தளபதிக்கு அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வன்மையாக கண்டித்துள்ளதால்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சஜித் பிரேமதாசவை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிரிவினைவாதத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத் துவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறியாக இருக்கின்றனர்.இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை, தமிழ்தேசிய கூட்டமைப்பினர் வரவேற்று ஆதரித்திருப்பது மிகுந்த கவலையளித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எதிர்க்கட்சித் தலைவராக

உள்ள நிலையிலும் நாட்டின் இறைமை, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் இராணுவத் தளபதிக்கு பக்கச் சார்பான அமெரிக்க அரசாங்கத்தின் தீர்மானத்தை சஜித் பிரேமதாச கண்டித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும். சஜித் பிரேமதாச கொண்டுள்ள நாட்டுப்பற்றை கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர், அவருக்கெதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்..

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறினார்.

இதேவேளை இராணுவத் தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத் தடைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இப்பயணத் தடை துரதிஷ்டவசமான அதேநேரம் கவலைக்குரிய விடயமென்றும் சமூக வலைத் தளங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றோம். நாடு என்ற அடிப்படையில் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ வீரர்களின் பக்கமே நாம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 -லக்ஷ்மி பரசுராமன்

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை