அரசுக்கு மூன்றில் இரண்டு பலம் கிடைத்தாலே இலக்குகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் ஐ.தே.க ஒரேயொரு ஆசனத்தையே கைப்பற்றுமென்று தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபபக்ஷவின் கரத்தை பலப்படுத்தக் கூடியவர்களை தெரிவு செய்யும்படி நாம் மக்களை வேண்டிக் கொள்கிறோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை கோட்டாபய ராஜபக்ஷ கேட்பது அவரது பதவியை பலப்படுத்துவதற்கென சிலர் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். அவ்வாறு இல்லை. நாட்டுக்குபொருத்தமான சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கேட்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போது மாத்தறை மாவட்டத்தில் அரசாங்கத்தின் சார்பில் 6 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இம்மாவட்டத்தில் மட்டுமல்லாது நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளனர். இதன் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறமுடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களித்த பெரும்பாலானோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். நாளுக்கு நாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் அணிதிரளுகின்றனர்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் அவர்களுடன் அணிதிரள பின் வாங்குகின்றனர். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மேலும் சக்தியாகஅமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கினாலும் கட்சியின் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை. அதேபோல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்தும் கட்சித் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை.இதிலிருந்து நாம் விளங்க வேண்டியது கட்சியின் உள்ளே அவரை தோற்கடிக்க திட்டங்கள் உள்ளன என்பதை,ரணில் விக்ரமசிங்க என்பவர் இலேசானவர் அல்ல. அவரது தீர்மானங்கள் தூர நோக்குடையது.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்று 3 மாதகாலத்துக்குள் நாம் மக்களுக்கு விசேட வேலைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு பல நிவாரணங்களை வழங்கியுள்ளோம்.

இதன் காரணமாக எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரத்தை பலப்படுத்துமாறு மக்களை வேண்டிக்கொள்கிறோம் என்றார்.

வெலிகம தினகரன் நிருபர்

Thu, 02/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை