சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றில் வேகமான வீழ்ச்சி

சீன பெருநிலத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை நேற்று வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் மையப் புள்ளியாக உள்ள ஹுபெய் மாகாணத்தில் நோயாளர்களை கண்டறியும் அளவுகோளில் மாற்றங்கள் கொண்டுவந்ததை அடுத்தே பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனாவில் புதன்கிழமை 394 பேருக்கு வைரஸ் தொற்றி இருப்பதாக தேசிய சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இது முந்திய தினம் நோய் தொற்றியவர்களின் 1,749 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெரும் வீழ்ச்சியாகும்.

அத்துடன் கடந்த ஜனவரி 23 ஆம் திகதிக்கு பின்னர் பதிவான மிகக் குறைவான வைரஸ் தொற்று எண்ணிக்கையாகவும் இது உள்ளது.

இதன்படி சீன பெருநிலத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 74,576 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸினால் மொத்தம் 2,118 பேர் உயிரிழந்துள்ளனர். 16,155 நோயாளர்கள் குணமடைந்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு கூறுகிறது.

சீனாவுக்கு வெளியில் 1,000க்கும் அதிகமானவர்களுக்கும் கொவிட்–19 வைரஸ் தொற்றியிருப்பதோடு அதில் ஜப்பானில் தனிமைப் படுத்தப்பட்ட டயமன்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்தவர்களுக்கே அதிகம் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

இதனால் இந்தப் கப்பலில் இருந்த இரு ஜப்பானிய பயணிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு பயணி கொவிட்–19 இனால் உயிரிழந்திருப்பதோடு மற்றையவர் நிமோனியாவினால் உயிரிழந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த இருவரும் தமது 80 வயதிகளில் இருந்ததோடு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர்.

இவர்கள் கடந்த வாரம் சொகுசு கப்பலில் இருந்து வெளியெற்றப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த சொகுசுக் கப்பலில் இருந்த மொத்தம் 621 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்றியது உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கணக்கான ஏனைய பயணிகள் ஏற்கனவே கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் சிலர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய இரு வயது முதிர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த வைரஸினால் மத்திய கிழக்கில் ஏற்பட்ட முதல் உயிரிழப்புகளாக இது பதிவாகியுள்ளது.

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை