சிரிய அரச படைக்கு எதிரான நடவடிக்கைக்கு துருக்கி தயார்

ஜனாதிபதி எர்துவான் எச்சரிக்கை

சிரியாவில் அரச எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப்பில் அரச படையின் தாக்குதல்களை நிறுத்துவதற்கான படை நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதில் நாட்கள் மாத்திரமே தடையாக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரித்துள்ளார்.

இந்த எல்லை பகுதியை ஒரு பாதுகாப்பு பிரதேசமாக மாற்றுவதற்கு எந்த இழப்பிற்கும் முகம்கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு உடன்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் எல்லைக்கு திரும்பும் கோரிக்கையை சிரிய அரசு மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா நிராகரித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் கடந்த டிசம்பர் 1ஆம் திகதி தொடக்கம் அரை மில்லியன் சிறுவர்கள் உட்பட சுமார் 900,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தக் காலப்பிரிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதோடு சிரிய அரச படை மற்றும் அதன் கூட்டாளிகளின் தாக்குதல்களிலேயே அதிகம் பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. ஒரு வயது பெண் குழந்தை மற்றும் ஏழு மாத ஆண் குழந்தைகள் உட்பட கடும் குளிரால் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

“தாக்குதல்கள் மக்கள் செறிவு கொண்ட பகுதிகளை அடைந்துள்ளன. உறையும் குளிருக்கு மத்தியில் மகள் பாதுகாப்பான இடத்தை தேடி நகர்கின்றபோதும் அவ்வாறான இடத்தை அடைவது கடினமாக உள்ளது” என்று ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜரிக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மக்கள் செறிவு கொண்ட பகுதிகளில் மோதல் ஏற்பட்டால் மனித அழிவுகள் பெரிய அளவில் ஏற்படும் என்று ஐ.நாவின் மனிதாபிமான தலைவர் மார்க் லோகொக் எச்சரித்துள்ளார்.

அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை கவிழ்ப்பதற்கு போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாத் போராளிகளின் கடைசி கோட்டையாக இத்லி உள்ளது.

இங்கு அண்மைய ஆண்டுகளில் அகதிகளின் படையெடுப்பினால் ஒரு மில்லியன் சிறுவர்கள் உட்பட மக்கள் தொகை சுமார் மூன்று மில்லியனாக அதிகரித்துள்ளது. தமது நாட்டை நோக்கி மற்றொரு அகதிகள் படையெடுப்பு பற்றி அஞ்சும் துருக்கி இத்லிப்பில் கண்காணிப்புச் சாவடிகளை அமைத்து படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மோதல் தடுப்பு வலயம் ஒன்றை உருவாக்கும் ரஷ்யாவுடன் 2018 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட சொச்சி உடன்படிக்கைக்கு அமையவே இந்த கண்காணிப்பு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் சிரிய அரச படை இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றுவதை தடுப்பதற்கு துருக்கியால் முடியாமல்போயுள்ளது. ரஷ்யாவின் வான் தாக்குதல்கள் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளின் உதவியுடனேயே அசாத் அரசு அங்கு முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்நிலையில் ஆளும் ஏ.கே கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் உரையாற்றிய எர்துவான், “இத்லிப்பில் அரச படை தாக்குதல்களை நிறுத்த வேண்டிய இறுதிக் காலத்திற்கு நாம் வந்திருக்கிறோம். நாம் இறுதி எச்சரிக்கையை விடுக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“படை நடவடிக்கை ஒன்றுக்கான அனைத்து ஏற்படுகளையும் துருக்கி மேற்கொண்டுள்ளது. எந்த நேரத்திலும் நாம் அதனை மேற்கொள்வோம். வேறு வகையில் கூறுவதென்றால் இத்லிப் விவகாரத்தில் எமக்கு காலம் மாத்திரமே தடையாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை