கச்சதீவு பெருவிழா மார்ச் 7 இல்; சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

3,000 இந்தியர்கள் உட்பட 10,000 யாத்திரிகர் பங்கேற்பர்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. அத்துடன் இம் முறை பத்தாயிரத்துக்கும் அதிகமான பக்கதர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

மார்ச் மாதம் 6 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன், ஆரம்பமாகி, 7 ஆம் திகதி பெருதிருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் கச்சதீவுக்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார், போக்குவரத்து துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இக் கலந்துரையாடல் தொடர்பாக மேலதிக அரச அதிபர் தெரிவிக்கையில், மார்ச் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல், இரவு 10 மணிவரை கச்சதீவுக்கு செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திலிருந்தும், தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்தும், குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவுக்கான படகுச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானிலிருந்து, கச்சதீவுக்கான படகுச் சேவைக் கட்டணம், ஒரு வழிக் கட்டணமாக 325 ரூபாவும், நெடுந்தீவிலிருந்து, கச்சதீவுக்கான கட்டணமாக 250 ரூபாவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கச்சதீவில், உணவு மற்றும், சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும், கடற்படை,பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து மேற்கொண்டுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில், இந்தியாவிலிருந்து, சமார் 3,000க்கும் அதிகமாக யாத்திரிகர்களும், இலங்கையிலிருந்து 7,000க்கும் அதிகமான யாத்திரிகர்களும் வருகை தருவார்களென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

யாத்திரிகர்கள் எந்தவித அச்சமுமின்றி, பாதுகாப்பான முறையில் தமது வழிபாட்டில் ஈடுபட முடியுமென்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

 

Sat, 02/15/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக