உலக அவசர நிலை பிரகடனம்: உயிரிழப்பு 213 ஆக அதிகரிப்பு

புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வெளியிலும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலை ஒன்றை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.

“சீனாவில் நிகழ்ந்துகொண்டிருப்பதற்கு அப்பால் ஏனைய நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளே இந்தப் பிரகடனத்தை வெளியிடுவதற்கான பிரதான காரணமாகும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ் குறிப்பிட்டார்.

பலவீனமான சுகாதார கட்டமைப்பு கொண்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்புக் குறித்தே உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இதனிடையே சீனாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நான்காம் நிலை பயண எச்சிரிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக சீனாவுக்கு பயணிப்பதை அமெரிக்கர்கள் மீள் பரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தி இருந்தது.

வெளிநாடுகளில் இருக்கும் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்த குடிமக்களை அழைத்து வர சீனா விரைவில் பிரத்தியேக விமானங்களை அனுப்பும் என்று அறிவித்துள்ளது.

சீன பிரஜைகள் வெளிநாடுகளில் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஹுபெய்யிலேயே இந்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்திருப்பதோடு, சீனாவெங்கும் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியில் 18 நாடுகளில் 98 சம்பவங்கள் பதிவானபோதும் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் மையம் கொண்டிருக்கும் ஹுபெயின் ஹுவான் நகரைச் சேர்ந்தவர்களை தொடர்புபட்டே சர்வதேச அளவில் இந்த வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஜெர்மனி, ஜப்பான், வியட்நாம் மற்றும் அமெக்காவில் எட்டு சம்பவங்களில் சீனாவில் இருந்து பயணித்தவர்களிடம் இருந்து நோய் தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

ஜெனீவாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே டொக்டர் டெட்ரோஸ், சர்வதேச அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இது முன்னர் கண்டிராத நோய் தொற்று என்றும் அதற்கு முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சீனா மேற்கொண்டிருப்பு “அசாதாரண நடவடிக்கையை” அவர் பாராட்டியதோடு சீனாவுக்கான வர்த்தக மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் தேவை எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“இந்த பிரகடனம் சீனா மீதான நம்பிக்கையின்மையை காட்டுவதில்லை என்பதை நான் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பல நாடுகளும் சீனாவுக்கு தமது எல்லைகளை மூடுவது மற்றும் விமானங்களை ரத்துச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள், ஐகீ, ஸ்டார்பக்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் சீனாவில் உள்ள தமது வர்த்தகங்களை நிறுத்தியுள்ளது.

சர்வதேச அளவில் பரவும் நோய் தொற்று ஒன்றினால் பொதுச் சுகாதாரத்திற்கு அச்சுத்தல் ஏற்படும் அசாதாரண நிகழ்வு ஒன்றை அடிப்படையாகக் கொண்டே உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசர நிலையை பிரகடனம் செய்யும்.

இதற்கு முன்னர் ஐந்து தடவை சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல், 2009 – எச்1என்1 வைரஸ் 2009 ஆம் ஆண்டு உலகெங்கும் பரவி 200,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

போலியோ, 2014 – 2012 ஆம் ஆண்டு போலியோவை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை வெற்றியளித்த நிலையில் 2013இல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

சீகா, 2016 – அமெரிக்காஸ் நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவியதை அடுத்தே உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனம் செய்தது.

எபோலா, 2014 மற்றும் 2019 – 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் தொடக்கம் 2016 மார்ச் வரை முதல் முறை அவசர நிலை பிரகடனம் செய்தபோது அந்தக் காலத்தில் மேற்கு ஆபிரிக்காவில் 30,000 பேருக்கு இந்த வைரஸ் தொற்றி 11,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்த வைரஸ் கொங்கோவில் மீண்டும் உருவெடுத்ததை அடுத்து கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

கட்டுப்படுத்த போராடும் சீனா

திபெத்திலும் கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த வைரஸ் சீனாவின் அனைத்து பிராந்தியங்களிலும் பரவியுள்ளது.

இந்த வைரஸ் 9,692 பேருக்கு தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய மாகாணமான ஹுபெயிலேயே கிட்டத்தட்ட அனைத்து உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அந்தப் பிராந்தியம் வெளி மாகாணங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. 60 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாகாணத் தலைநகரான வுஹானே வைரஸின் மையப் பகுதியாக உள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க இங்கு கடுமையான பயணத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து ரத்து, கடைகளும் வியாபாரங்களும் மூடப்பட்டதுடன் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வுஹான் நகரில் வசிக்கின்ற சோன் யுவான் என்ற ஆசிரியர், அந்த நகரின் நிலை குறித்து விபரித்துள்ளார்.

“எனது அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல் ஊடாக நேற்று இரவு வீதியை பார்த்தேன், முழுமையாக வெறிச்சோடிக் கிடந்தது. அண்டை வீட்டாரிடம் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. சில தெருவிளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

இராட்சத எல்.ஈ.டி திரையில், மக்கள் வீட்டுக்குள் இருக்கும்படியான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. இந்த காட்சிகள் அனைத்தும் சொம்பி திரைப்படங்களை நினைவூட்டுவதுபோல் இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹுபெய் மாகாணத்தில் இருப்பவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அவர்களது தொழில் வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான சீன பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி உலகின் பல நாடுகளும் தமது பிரஜைகளை கேட்டுக்கொண்டுள்ளன.

சீனாவிற்கான பயணங்களை வாடிக்கையாளர்கள் பலர் ரத்துசெய்துள்ளதாகப் பயண முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், சீனச் சுற்றுப் பயணங்கள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைத்திருப்பதாக நிறுவனங்கள் சில கூறியுள்ளன.

வுஹானில் சிக்கிய வெளிநாட்டினர்

புதிய கொரோனா வைரஸ் மையம் கொண்டிருக்கும் வுஹான் நகரில் இருந்து சில நாடுகள் அவற்றின் குடிமக்களை மீட்டுக்கொண்டுள்ளன.

சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி குடிமக்களைத் திரும்ப அழைத்துவர ஏற்பாடு செய்திருந்தன.

தென் கொரியா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் விரைவில் தங்களின் குடிமக்களைத் அழைத்துவர ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றன.

ஆனால் தாய்லந்து, பாகிஸ்தான், மியன்மார், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர் பரிதாபமாய் உதவிக்குக் காத்திருப்பதாய் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என்று பல தரப்பினரும் வுஹான் நகரில் சிக்கியுள்ளனர். சில நாடுகளின் குடிமக்களை அழைத்துச் செல்ல மட்டுமே சீனா அனுமதி வழங்கியிருப்பதாய்க் கூறப்படுகிறது.

தங்களை வுஹான் நகரிலிருந்து பக்கத்து நகருக்காவது மாற்றக் கூடாதா என்று அவர்கள் மன்றாடுகின்றனர். மியன்மாரைச் சேர்ந்த சிலர் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின்வழி, தங்களை மீட்கும்படி கெஞ்சிக் கேட்கின்றனர்.

“மற்ற நாடுகள் தங்கள் குடிமக்களை அழைத்துக் கொள்கின்றன. எங்களுக்கு ஏன் இந்த நிலை?” என்று அவர்கள் குமுறுகின்றனர்.

தண்ணீரையும், உணவையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு, அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாய் அவர்கள் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். இதேவேளை ரோம் நகரில் இரு சீன சுற்றுப்பயணிகளிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சீனாவுக்கான விமானப் பயணங்களை இத்தாலி இடை நிறுத்தியுள்ளது.

ரஷ்யா தமது சீனாவுடனான 4,300 கிலோமீற்றர் எல்லையை மூடுவதற்கு தீர்மானித்திருப்பதோடு இஸ்ரேல் சீனாவுடனான விமானத் தொடர்புகளை நிறுத்தியுள்ளது.

Sat, 02/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை