சுதந்திர தினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு

மக்கள் வங்கி ‘நிதஹசே உபத’ எனும் செயற்திட்டத்தின் கீழ் இன்று பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதிக்குள் இந்நாட்டில் பிறந்திடும் ஒவ்வொரு குழந்தைக்கும் 2,000ரூபா பெறுமதியான இசுறு உதான பரிசுச் சான்றிதழ் ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி மக்கள் வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘நிதஹசே உபத’ (பிறப்பின் சுதந்திரம்) எனும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 04ஆம் திகதி காலை 9.30மணிக்கு பொரளை காசல் வீதியிலமைந்துள்ள பெண்கள் வைத்தியசாலையில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் ரசித குனவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

தேசத்தின் பெருமையை உருவாக்கிடும் நோக்கத்தை முக்கியமாகக் கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோரின் மனதில் ஏதாவதொரு இலக்கை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மக்கள் வங்கி இந் நிகழ்ச்சித் திட்டத்தை 2006ஆம் ஆண்டு ஆரம்பித்தது.

மக்கள் வங்கியின் ஊழியர்கள் குழந்தைகள் பிறந்த வைத்தியசாலைக்கே சென்று இப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்குகின்றமை சிறப்பம்சமாகும். அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு சென்று இச் சான்றிதழைக் காண்பித்து, உங்கள் பிள்ளைக்கான இசுறு உதான கணக்கொன்றை ஆரம்பித்து, பணம் வைப்புச் செய்வதன் மூலம் தொடர்ந்தும் அக் கணக்கை நடத்திச் செல்ல முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கு மேலதிகமாக பொரளை சொய்சா பெண்கள் மருத்துவமனை உள்ளடங்கலாக நாடு முழுதும் உள்ள மக்கள் வங்கியின் அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, காலி, கம்பஹா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரேலியா, பொலன்னறுவை, புத்தளம், இரத்தினபுரி, திருகோணமலை, வன்னி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் ‘நிதஹசே உபத’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Sat, 02/01/2020 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை