நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி தொடரை 5–0 என முழுமையாக வென்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் வென்ற இந்தியா 4–0 என தொடரில் முன்னிலையில் இருந்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மவுன்கனுயில் நேற்று நடந்தது. விராத் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டதால், இந்திய அணியின் தலைமை பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்றார். தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் வில்லியம்சனுக்குப் பதில் மீண்டும் நியூசிலாந்து அணியை சவுத்தீ வழிநடத்தினார். நாணய சுழற்சியில் வென்ற அணித்தலைவர் ரோகித் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் சர்மா முதல் வரிசையில் களமிறங்கி 41 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களையே பெற்றது. எனினும் நான்காவது விக்கெட்டுக்கு டிம் சைபர்ட் (50) மற்றும் ரொஸ் டெய்லர் (53) 99 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டபோதும் பின்னர் வந்தவர்கள் அதனை வெற்றியாக மாற்ற தவறினர்.

Mon, 02/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை