மார்ச் முதலாம் திகதி முதல் ரூ. 1,000 கிடைப்பது உறுதி

சில சரத்துகள் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்ததால் திருத்தம் செய்யவே ஒப்பந்தம் ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்றவர்கள் 1,000 ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் 01 திகதி முதல் நிச்சயம் 1,000 ரூபா கிடைக்கும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்றைய தினம் டயகம நெட்போன் பிரதேச பாடசாலையின் கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் அரசியல்வாதி கிடையாது. அவர் சிறந்த நிர்வாகி. எனவே, அவருக்கு வாக்களித்தால் இலகுவில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி தேர்தலின்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.

எனினும், 140 ரூபா, 100 ரூபா, இறுதியில் 50 ரூபா என அறிவிப்புகளை மட்டுமே விடுத்து அதனை பெற்றுக்கொடுக்காத தரப்பின் வேட்பாளருக்கு வாக்குகளை அள்ளி வழங்கினீர்கள். ஆனால், தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றிபெற்றார்.

நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் கூட, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று, சிறுபான்மையின மக்கள் மீதும் மதிப்புள்ளதால் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்தார்.

இதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி 13ஆம் திகதி கைச்சாத்திடப்படவிருந்தாலும் சில சரத்துகள் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்ததால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளுமாறு பணிப்பு விடுத்தேன். இதன் காரணமாகவே நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்தியாவிலிருந்து திரும்பிய கையோடு இது தொடர்பில் வானொலி ஊடாக அறிவிப்பு விடுத்தேன். எது எப்படியிருந்தபோதிலும் மார்ச் 01 திகதி முதல் 1,000 ரூபா கிடைப்பது உறுதி.

இந்நிலையில் அடிப்படை சம்பளமாக 1,000 ரூபா வேண்டுமென ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்றவர்களுக்கு ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கே அது பற்றி கதைக்கும் உரிமை இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் அரசாங்கத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் 1,000 ரூபா தொடர்பில் பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. ஐயா காலத்திலிருந்து காங்கிரஸ்தான் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் நாம்தான் வாங்கிக்கொடுப்போம். அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.

கல்வி மற்றும் அபிவிருத்திகள்

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 4,000 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை கட்டுவதற்கு இந்தியா உதவியளிக்கும்.

ஆனால் வீடுகளுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கமே செய்ய வேண்டுமென்பதே இந்தியாவின் கருத்தாக இருந்தது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

Sat, 02/15/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக