அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப்பணிகளை துரிதமாக்க ஜனாதிபதி கோட்டாபய பணிப்பு

* கொழும்பு பாதை நெரிசலுக்கு உடனடித் தீர்வு
* கொழும்பு மெரைன் டிரைவ் பாணந்துறை வரை விஸ்தரிப்பு
* பொதுப் போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யத் திட்டம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளை மிகத் துரிதமாக நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

முதற்கட்ட நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து திறந்து வைக்கப்படுதல் வேண்டும். மத்திய அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து மீரிகம ஊடாக குருநாகல் வரை, குருநாகல் தொடக்கம் தம்புள்ள வரை, பொதுஹெர முதல் கலகெதர வரையிலான பகுதிகளை உடனடியாக நிறைவு செய்ய வேண்டியது பிரிதொரு செயற்திட்டமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வீதி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

கடவத்தை தொடக்கம் தம்புள்ளை வரையிலான  அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்ததன் பின்னர் வாகனங்களுக்கு வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு மிக விரைவாக பிரவேசிக்கக்கூடியதாக இருக்கும். மக்களுக்கு மிகவும் இலகுவாக பயணங்களை மேற்கொள்வதற்கு வழி செய்வதே இதன் நோக்கமாகும். வீதி முறைமைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்ட பொருளாதார வழியொன்றும் இதன்மூலம் உருவாகும்.

இங்கிரிய முதல் இரத்தினபுரி வரையிலான 76 கிலோ மீற்றர் வீதி நிர்மாணப் பணிகளை விரைவாக மேற்கொண்டு தேசிய அதிவேக வீதி முறைமையுடன் இணைக்கப்படவுள்ளது. இது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவையில் ஆரம்பமாகும். கண்டி சுரங்கப் பாதை நிர்மாணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதும் அதிக வீதி நெரிசலுக்கு தீர்வாக அமையும்.

தற்போது பகுதியளவு நிறைவு செய்யப்பட்டுள்ள வீதி மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும். கிராமிய வீதி முறைமையை ஏனைய வீதி முறைமைகளுடன் இணைந்ததாக நவீனமயப்படுத்த வேண்டும்.

காலி வீதி மற்றும் கடுவலை, ஹைலெவல் மற்றும் பிலியந்தலை வீதிகளில் கொழும்பு நோக்கி காலை மற்றும் மாலை நேரங்களில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினையும் விரைவுபடுத்த வேண்டும்.

அதிக நெரிசலைக் கொண்டுள்ள இடங்களை இனங்கண்டு மேம்பாலங்களும் சுரங்கப் பாதைகளும் நிர்மாணிக்கப்படவுள்ளது. தெமட்டகொடை வனாத்தமுல்லையின் ஊடாக பத்தரமுல்லை வரையிலான வீதியை நிர்மாணிப்பது பற்றியும் ஆராயப்படவுள்ளது. அதன்மூலம் பொரல்லை மற்றும் ராஜகிரிய சந்திகளில் நிலவும் வாகன நெரிசல்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.

காலி வீதியிலும் டுப்லிகேஷன் வீதியிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக காலி வீதிக்கு சமாந்திரமாக கடலோரப் பாதை (மெரைன் டிரைவ்) பாணந்துறை வரை நீடிப்பது குறித்தும் ஆராய வேண்டும் என்றார்.

வீதிகளை நிர்மாணிப்பதற்கு இணையாக பொதுப் போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். மோட்டார் வாகனங்களில் நகரங்களுக்குள் பிரவேசிப்பதை குறைப்பதற்கு சொகுசு பஸ் வண்டிகள் மற்றும் பாடசாலை பஸ் வண்டிகளின் சேவையை முறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து கொழும்புக்குள் வரும் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு பொருத்தமான இடங்களை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. வியாபார நிலையங்களை அமைக்கும்போது வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி மார்க்கங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை நிறுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் பணிப்புரை விடுத்தார்.

 

Sat, 02/15/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக