உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சி.ஐ.டி விசாரணை; 17 வரை விளக்கமறியல்

அபுதாபி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

அபுதாபியிலிருந்து இவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று நாட்டுக்கு அழைத்து வந்த நிலையிலேயே நேற்று விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அபுதாபியிலுள்ள சிறையொன்றில் 5 மாதங்கள் வரை தடுத்துவைக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்கவை அழைத்து வருவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கடந்த 11ஆம் திகதி டுபாய் நோக்கி சென்றிருந்தனர். அபுதாபி சிறைச்சாலையிடமிருந்த விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இவர்கள் அங்கு

சென்றிருந்தனர்.

இன்டர்போல் விடுத்திருந்த சிவப்பு எச்சரிக்கையின் பிரகாரமே உதயங்க வீரதுங்க அபுதாபியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த மோசடி தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் உதயங்கவை கைதுசெய்யுமாறு இன்டர்போலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் கோரிக்கையின் பிரகாரமே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத் தருணத்தில் உதயங்க வீரதுங்க அபுதாபியிலேயே தங்கியிருந்தார். இந்த உத்தரவின் பிரகாரம் அவர் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் உரிய ஆவணங்கள் அபுதாபி பொலிஸாருக்கு கிடைக்கப்பெறாமையால் அத்தருணத்தில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி செல்லும் போதே அவர் மீண்டும் அபுதாபியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். சர்வதேச பொலிஸாரின் பிடியாணையின் பிரகாரம் அபுதாபி குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட பின்னரே உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டார்.

அவரை இலங்கைக்கு அழைத்துவர 2018ஆம் ஆண்டு பெப்வரி 7ஆம் திகதி விசேட குழுவொன்று இலங்கையிலிருந்து அபுதாபி சென்ற போதும் சட்ட சிக்கல்கள் காரணமாக அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இவ்வாறான பின்புலத்திலேயே கடந்த 11ஆம் திகதி உதயங்க வீரதுங்கவை நாடு கடத்துவதற்கான அழைப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

கயான குமார வீரசிங்க

 

Sat, 02/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை