கச்சத்தீவு திருவிழா இ​ம்முறை 10,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெகுவிமர்சையாக நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இம்முறை விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த திருவிழாவிற்கு இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

இம்முறை திருவிழாவில் கலந்துகொள்ளும் சகல பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நோய் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான சகல ஏற்பாடுகளையும் கடற்படையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கச்சதீவு திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளாவிய ரீதியில் காணப்படுகின்ற நிலையில் நோய் தொற்றுகள் எதுவும் ஏற்படாத வண்ணம் விஷேட மருத்துவ மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளத் தேவையான சகல ஏற்பாடுகளும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலிருந்தும் வருகைதரும் பக்தர்கள் எவ்வித தங்கு தடையின்றி திருவிழாவில் பங்கு கொள்வதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் தங்குமிட வசதிகளையும் வழக்கம் போன்று இம்முறையும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் த சில்வா ஆகியோரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸாதிக் ஷிஹான்

 

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை