ரணில் - சஜித் சந்திப்பு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்க இணக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற முக்கிய சந்திப்பின் போதே இவ் அழைப்பை ரணில் ஏற்றுகொண்டுள்ளார்.

பலமுள்ள கூட்டணியாக அமைத்து தேர்தலில் வெற்றி இலக்கை கவனத்தில் கொண்டு செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இதன் போது ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சஜித் பிரேமதாச தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார்.

அத்துடன் இப் பயணத்தில் காத்திரமான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் பெற்றுத்தந்தமைக்காக சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமைக்குள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி இறுதி இணக்கப்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் புதிய கட்சியின் சின்னம் தொடர்பில் முடிவெடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

சின்னத்தைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தடைகள் களையப்பட்டிருப்பதாகவும், அன்னம் சின்னத்தைப் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் இதன்போது சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை நேற்றுக் காலை ஐ.தே. க. தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது, கட்சியின் செயற்குழுவை அவரசமாகக் கூட்டி திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் வைபவத்துக்கு ஒத்துழைப்பைப்பெற்றுக் கொடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரிய கம்பஹா மாவட்டத்தின் தலைமை வேட்பாளராக போட்டியிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே கொழும்பில் களமிறங்கத்தீர்மானித்திருக்க போதிலும் தற்போதைய நிலையில் அடுத்த இரண்டொரு தினங்களில் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார் எனக் குறிப்பிட்டார்.

எம். ஏ. எம். நிலாம்

 

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை