நோய் அறிகுறிகள் தெரியும் முன் பரவும் சீன கொரோனா வைரஸ்

உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு

புதிய கொரோனா வைரஸ் மேலும் வலுப்பெற்று பரவி வருவதாகவும் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு நேற்று எச்சிரிக்கை விடுத்தது.

நோயரும்பு காலத்திலேயே இந்த புதிய வைரஸ் 2000க்கும் அதிகமானவர்களை தொற்றியிருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாக சீன தேசிய சுகாதார ஆணைக்குழு தலைவர் மா சியோவேய் தெரிவித்துள்ளார். முன்னர் அறியப்படாத இந்த புதிய வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸின் பிறப்பிடமான ஹுபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு முழுமையாக மூடப்பட்டிருப்பதோடு சீனாவெங்கும் பல நகரங்களில் பயணக் கட்டுப்பாடுகள் வீதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீனாவில் 5 முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்ததோடு, 13 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்டவை செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வுஹான் நகரின் வெறிச்சோடிய வீதிகள் மற்றும் தெருக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் அந்த நகரத்துக்குள்ளும் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்களும், அரசு வாகனங்களும் மட்டுமே வீதிகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நகரில் அடிப்படை பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் தீர்க்கமான கட்டத்தை எட்டி இருப்பதாக மா சியோவெய் எச்சரித்துள்ளார்.

எனினும் வைரஸை கட்டுப்படுத்த சீனாவில் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சீனாவில் அனைத்து காட்டு விலக்குகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தைகள், உணவகங்கள், மின்வணிகத் தளங்கள் அனைத்துக்கும் இந்தத் தடை பொருந்தும். விலங்களினால் இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படும் நிலையில் பாம்புகள், மயில்கள், முதலைகள் மற்றும் ஏனைய விலங்குகள் சீனாவின் மின்வணிகத் தளங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய வைரஸ் மிருகங்களை பூர்வீகமாகக் கொண்டது என்றும் அது மனிதனைத் தாவிய பின் வேகமாக பரவிவருவதாகவும் ஆரம்பத்தில் நம்பப்பட்டது. எனினும் ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் நோயரும்பு காலம் ஒன்று முதல் 14 நாட்கள் என சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர். இந்தக் காலத்தில் நோய் தொற்றியவரிடம் எந்த நோய் அறிகுறிகளும் ஏற்படாதபோதும் அந்த நோய் தொற்று பரவும் திறன் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயது முதிர்ந்தவர்களாவர். இன்னும் இது ஒரு புதிய வைரஸாக இருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படக் கூடும் என்றும் மாறுபட்ட வயதினர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இந்த புதிய வைரஸின் சாத்தியமான மாறும் தன்மையால் ஏற்படும் அபாயங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

மத்திய சீன நகரான வுஹானில் இருக்கும் கடல் உணவுச் சந்தை ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் இந்த வைரஸ் தோன்றி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சந்தை வனவிலங்குகள் சட்டவிரோதமாக விற்கப்படும் இடமாகவும் உள்ளது.

தற்போது பீஜிங் மற்றும் ஷங்காய் உட்பட சீனாவின் பிரதான நகரங்களுக்கும் பரவி இருக்கும் இந்த வைரஸ் அமெரிக்கா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, நேபாளம் மற்றும் கனடா நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று வேகமாக நாட்டை ஒரு மோசமான சூழ்நிலைக்கு தள்ளுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார்.

சீனாவில் சந்திர புத்தாண்டுக்கான பொது விடுமுறை நாளில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய ஷி ஜின்பிங், “இந்த நாடு கடுமையான சூழலை சந்தித்து வருவதாக” மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சார்ஸ் வைரஸ் போன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், சீன அரசு பாதுகாப்பு அவசரநிலையை அறிவிக்கவுள்ளது. இதற்காக அடுத்த 10 நாட்களில் 1,300 பேருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையைக் கட்ட உள்ளது. வுஹான் மாநிலத்திலும் அடுத்த 15 நாட்களில் 1000 பேர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனையைக் கட்டவுள்ளது.

கொரோனா வகையைச் சேர்ந்த இந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிர்களை பலி கொண்ட சார்ஸ் வைரஸின் 70 வீதத் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த கொரோனா வைரஸ் சீனாவில் இதுவரை 30 மாநிலங்களில் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 18 நகரங்களுக்கு யாரும் செல்லக்கூடாது, எந்த வாகனங்களும் இயக்கக்கூடாது என்று சீனா போக்குவரத்து தடையைக் கொண்டு வந்துள்ளது. இதனால் 1.10 கோடிக்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிக நாடுகளில் வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அதனைத் தடுப்பதில் உலகெங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வுஹானில் வேலைசெய்யும் தனது ஊழியர்களை அமெரிக்காவுக்குத் திரும்ப அழைத்துக்கொள்ள அமெரிக்க உள்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளைக் கொண்ட விமானம் ஒன்றில் அமெரிக்கக் குடிமக்கள் திரும்பவுள்ளனர். வுஹான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே 13 இடங்களில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் சுவாச நோயை ஏற்படுத்தும் இந்த புதிய வைரஸ் தொடர்பில் சர்வதேச சுகாதார அவசர நிலை ஒன்றை பிரகடனம் செய்வதில் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

2019–nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும், இதன் மூலம் எது என்று இதுவரை அடையாளம் காணமுடியவில்லை.

சிலநேரம் வைரஸ்கள் தனது நிலையை மாற்றி அதிக ஆபத்துக் கொண்டதாக மாறும் அபாயம் உள்ளது. எனினும் புதிய வைரஸ் தன்னை மாற்றிக் கொண்டது பற்றி இதுவரை எந்த தடயமும் இல்லை என்று சீன அதிகாரிகள் குறிப்பிட்டபோதும் அது ஆபத்தாக மாறும் சாத்தியம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை.

சுவாச பிரச்சினை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் உறுப்பு செயலிழப்பு, நிமோனியா மற்றும் உயிரிழப்பை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை