ரஞ்சனின் குரல் பதிவினால் சட்டம், நீதித்துறைகள் சீர்குலைவு

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்ட

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல் பதிவுகள் காணரமாக சட்டம் மற்றும் நீதித் துறைகள் முற்றுமுழுதாக சீர்குலைந்துள்ளதாக துறைமுகங்கள் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கல் அமைச்சின் 60 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் கண்டி மத்திய சந்தைத் தொகுதிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பயணிகள் சுரங்கப் பாதையை திறந்துவைத்த பின்னர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இங்கு மேலும் அமைச்சர் குறிப்பிடுகையில்,

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் சம்பவத்தினால் ஒட்டுமொத்த நீதித்துறையினதும் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகா சங்கத்தினர், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களையும் சிறையில் அடைக்குமாறு பல உயர்பதவிகளில் உள்ள நபர்களுககு அறிவுறுத்தல்களை வழங்கும் வகையிலான தொலைபேசி உரையாடல்கள் காரணமாக சட்டம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிக் கட்டமைப்பு என்பன முற்றாக சீர்குலைந்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள குரூர மனப்பான்மையுடைய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலேயே குரல்பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஐந்து வருடங்களாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக அவர்கள் இதனையே செய்து வந்துள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மத்திய வங்கியின் பிணைமுறிகள் மோசடியில் ஈடுபட்ட திருடர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டை முன்னேற்றமடையச் செய்வதற்கும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கும் தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

பிணைமுறிகள் மோசடி தொடர்பான தடயவியல் அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த அறிக்கையை தாம் இதுவரை பார்வையிடவில்லை என்பதுடன், அந்த அறிக்கை ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து தம்மால் எதனையும் கூறமுடியாது எனவும் பெருந்தெருக்கள் அமைச்சர் கூறினார்.

நாட்டு மக்களின் இதயத்திற்கு நிகரான மத்திய வங்கியை ஐக்கிய தேசிய கட்சியே கொள்ளையடித்தது எனவும், நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்ற ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள சிலர் இன்றளவில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அரசியல் நெருக்கடியை உருவாக்க முற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கண்டியில் மேலும் சில அபிவிருத்திகளுக்கான வேலைகளையும் பெருந்தெருக்கல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆரம்பித்து வைத்தார். இதன்போது பெருந்தெருக்கல் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

(தினகரன்-செங்கடகல நிருபர்)

Mon, 01/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை