கஞ்சா விற்பனைக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் சம்பவம்

வவுனியா வேப்பங்குளம், 6ஆம் ஒழுங்கையில் கஞ்சா போதைப்பொருள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடு ஒன்றை முற்றுகையிட்டு அப் பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் இரவு 6.30 மணியில் இருந்து இரவு 9.30 வரை போராட்டம் இடம்பெற்றது.

வவுனியா, வேப்பங்குளம், 6ம் ஒழுங்கையில் வசித்துவரும் ஒரு குடும்பத்தினர் கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், சிறுவர்கள் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவித்து அவர்களின் வீட்டினை முற்றுகையிட்டு அப் பகுதி மக்கள், இளைஞர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்ததனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வர தாமதமானமையால் வேப்பங்குளம், 6 ஆம் ஓழுங்கையை மறித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி போராட்டத்தினை சுமுகமான நிலைக்கு கொண்டுவர முயன்ற போதும் குறித்த குடும்பத்தை அக் கிராமத்தில் இருந்து வெளியேற்றுமாறு மக்கள் கோரியதால் பதற்றநிலை ஏற்பட்டது.

இருப்பினும், குறித்த பகுதியில் இனிமேல் கஞ்சா விற்பனை இடம்பெறாது எனவும் அதற்கேற்ற நடவடிக்கையை எடுப்பதாகவும் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் தமக்கு முறைப்பாடு செய்யுமாறும் கோரி கூறினார். பொலிஸ் அதிகாரியின் கோரிக்கையையடுத்து ஆர்ப்பாட்டங்காரர்கள் மூன்று மணிநேரத்தின் பின் அங்கிருந்து சென்றிருந்தனர்.

வவுனியா விசேட நிருபர்

Thu, 01/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை