ஆசிய உள்ளக மெய்வல்லுநர் போட்டிகள்

கொரோனா வைரசினால் பிற்போடும் சாத்தியம்

சீனாவின் வூஹேன் நகரில் பரவிவரும் கொரோனா வைரசினால் இலங்கை உட்பட பல நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவிருந்த ஆசிய உள்ளரங்கு மெய்வல்லுநர் விளையாட்டுத் தொடர் உட்பட பல போட்டிகள் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மையில் முடிவுற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 8 தங்கங்களை வென்ற வீர, வீராங்கனைகள் பங்குகொள்ளவிருந்த மேற்படி போட்டித் தொடர் சீனாவின் ஹென்சூ நகரில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12, 13ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

சீனாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதாரண நிலையில் இப்போட்டித் தொடர் நடைபெறுமா? இல்லையா என்பதை கூற முடியாதுள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நாங்கள் நிலைமையை அவதானித்து வருகிறோம். இப்போட்டித் தொடருக்காக எமது வீரர்கள் நல்ல தயார் நிலையில் உள்ளனர்.

சீன அரசு இப்போட்டித் தொடர் தொடர்பாக கருத்தேதும் சொல்லாவிட்டாலும் அங்கு நிலவும் நிலைமையைப் அவதானிக்கும் போது நடைபெறவுள்ள சகல விளையாட்டு நிகழ்ச்சிகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிற்போட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எல்லா விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கும்படி அந்நாட்டு விளையாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக சீன ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

விளையாட்டு அதிகாரிகளின் உத்தரவுக்கமைய அந்நாட்டிலுள்ள பல விளையாட்டுக் கழங்களினால் இம்மாதம் நடைபெறவிருந்த பல விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பிற்போடுவதற்கு நடவடிக்கையெடுத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

இதனால் அதிக நாடுகள் பங்குகொள்ளும் இம்முறை சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய உள்ளக மெய்வல்லுநர் விளையாட்டு விழாவை பிற்போடுவதற்கோ அல்லது போட்டித் தொடரை வேறொரு நாட்டில் நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பெப்ரவரி 3ம் திகதி முதல் 11ம் திகதி வரை சீனாவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விழாவுக்கான பொக்சிங் தெரிவுப் போட்டிகளை ஜோர்தான் அம்மான் நகருக்கு மாற்றுவதற்கு ஏற்பாட்டுக்குழு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதே போன்று பெப்ரவரி 1ம் திகதி உலக கனிஷ்ட பொக்சிங் வீரர் ஜோஸ் ரம்ரேஸுக்கும் யுக்ரேய்ன் வீரர் விக்டர் பொஸ்டோருக்கு இடையில் நடைபெறவிருந்த போட்டியும் பிற்போடப்பட்டுள்ளது.

உயிர்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் எமது நாடு பெரிதும் பாதித்து வருகிறது.

இதனால் இங்கு நடைபெறவிருந்த தேசிய, சர்வதேச வளையாட்டு விழாக்கள் காலவரையறையின்றி பிற்போடுவதாக அந்நாட்டு ஜனாதிபதி சிங் ஜின்பிங்கின் அறிவித்துள்ளார்.

அவரின் உத்தரவுக்கமைய சீன விளையாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் ஆசிய உள்ளரங்கு மெய்வல்லுநர் விளையாட்டுத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவது சந்தேகமே.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை