இலங்கை அணி நிதான ஆட்டம்

சிம்பாப்வேயுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சிம்பாப்வே அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 406 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பகல்போசண இடைவேளைக்கு முன்னரே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சார்பில் ஆரம்ப வீரர்களான அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ விக்கெட்டை காத்து நிதானமாக துடுப்பெடுத்தாடினர்.

இதன்மூலம் நேற்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தப்படும்போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றில் --88 ஓட்டங்களை பெற்றது. கருணாரத்ன 40 ஓட்டங்களுடனும் பெர்னாண்டோ 40 ஓட்டங்களுடனும் ஆடி வந்தனர்.

எனினும் அணித்தலைவர் சீன் வில்லியம்ஸின் சதத்தின் மூலம் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் இலங்கைக்கு சவாலான ஓட்டங்களை பெற்றுள்ளது. சிறப்பாக ஆடிய வில்லியம்ஸ் 137 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்றார்.

அவர் ஐந்தாவது விக்கெட்டுக்கு சிகந்தர் ராசாவுடன் சேர்ந்து 159 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார். ராசா 99 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் 352 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த சிம்பாப்வே அணியின் எஞ்சிய நான்கு விக்கெட்டுகளும் 54 ஓட்டங்களுக்கு வீழ்ந்தன.

இதன்போது இலங்கை சார்பில் 42.3 ஓவர்கள் பந்துவீசிய லசித் எம்புல்தெனிய 182 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு தனஞ்சய டி சில்வா மூன்று விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

Wed, 01/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை