பொருளாதார வளர்ச்சியுடன் இலாபமீட்டுவதே அரச நிறுவனங்களின் பிரதான சவால்

நிறுவன தலைவர்களிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு

துரித பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே சகல அரச நிறுவனங்களினதும் முதன்மை பொறுப்பாகும். அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதும் அரசாங்கத்துக்கு சுமையாகாது இலாபமீட்டுவதே நிறுவனத் தலைவர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரம் மற்றும் பொதுமக்களுக்கான சேவை வழங்கல் ஆகியவற்றுக்கு நேரடி பங்களிப்பை வழங்கும் அரச கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் ஆகியவற்றின் புதிய தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு ஜனாதிபதி மேலும் கூறிப்பிடுகையில்,

2005 – 2014 காலகட்டத்தில் எமது நாடு பொருளாதார அபிவிருத்தியில் ஆசியாவில் முதலிடம் வகித்தது. ஆயினும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே இன்று எமக்குள்ள பாரிய சவாலாகும்.

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் நவீன தொழிநுட்பங்கள் உள்ளீர்க்கப்படல் வேண்டும். பயிற்றப்பட்ட தொழிற்படை மற்றுமொரு முக்கிய காரணியாகும். வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு கல்வி முறையிலும் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கக்கூடிய துறைகள் இனங்காணப்பட்டு, அவை முன்னேற்றப்பட வேண்டும். சுற்றுலா சபை, முதலீட்டு சபை போன்ற நிறுவனங்களுக்கு இதன்போது முக்கிய பொறுப்புக்கள் உள்ளன.

கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மீண்டு, பொருளாதார மறுமலர்ச்சிக்கு இந்த நிறுவனங்கள் உரியவாறு பங்களிப்பு வழங்க வேண்டும்.

கொழும்புக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவித்தல் நகர்புற நெருக்கடிக்கு தீர்வாகும். இந்த செயற்பாடுகளின் போது ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க தயாராக உள்ளேன் என்றார்.

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை