குரல் பதிவு இறுவட்டுக்களை ரஞ்சன் சமர்ப்பிக்கவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சர்ச்சைக்குரிய குரல் பதிவு தொடர்பான இறுவட்டுக்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் மீண்டும் வலியுறுத்திக்கூறினார்.

நேற்று பாராளுமன்றத்தில், ரஞ்சன் ராமநாயக்க கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய குரல் பதிவு இறுவட்டை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவ்வாறு எந்த இறுவட்டையும் அவர் சபையில் சமர்ப்பிக்கவில்லை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதில் எது உண்மை என இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் அந்த இறுவட்டில் சபாநாயகரின் உரையாடல் உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். எவ்வாறெனினும் எனது குரல் பதிவு அதில் கிடையாது என்றார்.

சிறைச்சாலையில் கைதியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளாமல் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமைக்கிணங்க அவர் அவ்வாறு பாராளுமன்றம் வருவதற்கு அனுமதி உண்டு.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் இதுவரை எந்தவொரு குரல்பதிவு அடங்கிய இறுவட்டுக்களும் பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கவில்லையென பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. இறுவட்டை மீளவும் ஆராயவேண்டியிருப்பதால் அதனை கையளிக்காது மீண்டும் எடுத்துச் செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டை சபையில் சமர்ப்பித்துள்ளாரென அறிக்கையிடப்படும் செய்திகளில் உண்மை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை