காரசாரமான விவாதத்துடன் செனட் சபையில் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு விசாரணை செனட் சபையில் காரசாரமான விவாதத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

அந்த விசாரணைக்குத் தேவையான ஆதாரங்களையும் ஆவணங்களையும் ஒப்படைக்க வெள்ளை மாளிகையை கட்டாயப்படுத்தும் ஜனநாயகக் கட்சியின் முயற்சிகளை குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட செனட் நிராகரித்தது.

அது, விசாரணை டிரம்ப்புக்குச் சாதகமாகவே அமையுமென்ற தொடக்கநிலை அறிகுறியாகக் கருதப்படுகிறது.

குடியரசுக் கட்சியினர் டிரம்ப்பின் நடவடிக்கைகளை மூடி மறைக்க முயல்வதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.

அதிகாரத்தைத் தவறாய்ப் பயன்படுத்தியதாகக் குறைகூறப்படும் டிரம்ப் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா, வேண்டாமா என்பதை விசாரணை முடிவு செய்யும்.

முன்னதாக டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் மிட்ச் மெக்கொனல் விசாரணைக்கான அடிப்படை விதிமுறைகளை வகுத்துத் தந்தார். அந்த விதிமுறைகள் முக்கிய சாட்சியங்களையும் ஆவணங்களையும் பெறுவதைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது.

டிரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கடந்த டிசம்பர் 18ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம், செனட் சபையின் அனுமதியையும் பெற வேண்டும். செனட்டில் ஆளும் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும் என்பதால் அவரது பதவிக்கு ஆபத்து இல்லை.

ஜனாதிபதி மீது பதவிநீக்க விசாரணை நடப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இது மூன்றாவது முறையாகும்.

2020இல் நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஜனநாயக கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோ பைடன் மற்றும் அவரது மகன் மீது உக்ரைன் அரசு விசாரணை நடத்த அந்நாட்டு ஜனாதிபதி வலாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு, டிரம்ப் அழுத்தம் தந்தார் என்பதே குற்றச்சாட்டாக உள்ளது.

முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரைன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அளித்து வரும் இராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை