சீனாவில் புதிய வைரஸினால் உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு

வுஹான் நகரில் பயணக் கட்டுப்பாடு

சீனாவில் தொற்றியுள்ள புதிய வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்திருக்கும் நிலையில் அது தீவிரம் அடைந்திருக்கும் வுஹான் நகருக்குச் செல்ல அல்லது அங்கிருந்து வெளியேற மக்களுக்கு சீன நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

8.9 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்த நகரில் உள்ளவர்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளை தவிர்க்கும்படியும் பொது ஒன்றுகூடல்களை குறைத்துக்கொள்ளும்படியும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வுஹான் நகரில் இருந்து இந்த வைரஸ் சீனாவின் பல மாகாணங்களுக்கும் பரவி இருப்பதோடு, அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலும் வைரஸ் தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போதும் 440 ஆக அதிகரித்துள்ளது. காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக விற்கும் கடல் உணவு சந்தை ஒன்றில் இருந்தே இந்த வைரஸ் பரவியுள்ளது.

அதனால் விலங்குகளிடம் பாதுகாப்பற்ற வகையில் நேரடி தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

“வுஹானுக்குச் செல்ல வேண்டாம். வுஹானில் இருப்பவர்கள் தயவுசெய்து நகரில் இருந்து வெளியேற வேண்டாம்” என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழுவின் துணைத் தலைவர் லீ பின் அறிவித்தியுள்ளார். இந்த நோய் தொற்றியதில் இருந்து பொதுமக்களுக்கு விடுக்கப்படும் முதல் அறிவுறுத்தலாக இது இருந்தது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது தொடர்பில் நாடு நெருக்கடியான நிலை ஒன்றை எதிர்கொண்டிருப்பதாக சீன நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவுவதாக சீனா முன்னதாக குறிப்பிட்டிருந்தது. 2019-nCo V என்று அறியப்படும் இந்த வைரஸ் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த முன்னர் மனிதர்களை தொற்றியதாக கண்டரியப்படாக புதிய வைரஸ் ஒன்று என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றியவர்களிடம் சுவாச மண்டலத்தில் பாதிப்பு, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச பிரச்சினை ஆகிய நோய் அறிகுறிகள் தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸின் சரியான மூலத்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் போராடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எபோலா, பன்றிக் காய்ச்சல் ஆகியவை பரவியபோது அறிவிக்கப்பட்டதுபோன்று இந்த வைரஸ் பரவலையும் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு முடிவு செய்யவுள்ளது.

சர்வதேச சுகாதார நெருக்கடியாக இது அறிவிக்கப்பட்டால், இதன் பரவலைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், இந்த வைரஸ் மாற்றம் அடைந்து மற்ற நாடுகளுக்கும் பரவலாம் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“இந்த நோய் சுவாசக்குழாய் வழியாக பரவுகிறது, மேலும் வைரஸ் மாற்றம் அடைந்து, நோய் மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. நோயின் மூலத்தையும், பரவலையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோம்” என தேசிய சுகாதார ஆணையக்குழுவின் துணை தலைவர் லீ பின் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட கொரியா தற்காலிகமாக வெளிநாட்டவர்களுக்கு தங்களது எல்லையை மூடியுள்ளது. அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான், ஜப்பான் ஆகிய நாடுகள் வுஹான் மாகாணத்தில் இருந்து வரும் விமானப் பயணிகளை சோதனை செய்தே அனுமதிக்கின்றன.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை