பிலிப்பைன்ஸ் ‘தால்’ எரிமலை அபாய நிலை தொடர்ந்து நீடிப்பு

பிலிப்பைன்ஸில் உள்ள ‘தால்’ எரிமலை சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ வெடிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அந்த எரிமலை தொடர்ந்து புகையையும் சாம்பலையும் கக்கி வருகிறது. அதனால் எரிமலை அபாய நிலைக் குறியீடு தொடர்ந்து உச்சத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பட்டன்காஸ் மாநிலத்தில் கரும்புகை சூழ்ந்திருப்பதால் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால், எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் தலைநகர் மனிலாவை நோக்கிப் பரவுகிறது.

பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்று அதிகாலை சுமார் 2 மணிக்கு, தால் வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை, எரிமலை அதிர்வுகள் உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.

எரிமலைக் குமுறல் காரணமாக இதுவரை உயிருடற்சேதம் எதுவும் இல்லை. எனினும், சாம்பல் மூட்டம் காரணமாக ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்து, மூவர் காயமடைந்தனர்.

எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 16,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர்.

மனிலா உட்பட பல்வேறு இடங்களில் பாடசாலைகளும் கடைகளும் மூடப்பட்டன.

மனிலா சர்வதேச விமான நிலையம், படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பி வரும் சூழலில், அங்கு இன்னமும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை